கால்சட்டையைச் சுத்தம் செய்யச் சொல்லி இளைஞரின் கன்னத்தில் அறைந்த பெண் காவலர்!


மாதிரிப் படம்

மக்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டிருக்கும் காவல் துறையினர் மத்தியில், அடக்குமுறையைப் பின்பற்றும் காவலர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைய சமூகவலைதள யுகத்தில் அப்படியான அத்துமீறல்களும் பதிவாகி, வெளியுலகத்தின் பார்வைக்கும் வந்துவிடுகின்றன. மத்திய பிரதேசத்தில் ஒரு பெண் காவலர், தற்செயலாகத் தன் மீது சேறு தெறிக்கக் காரணமாக இருந்த இளைஞரை அழைத்து தன் கால்சட்டையைச் சுத்தம் செய்ய வைத்த காணொலி தற்போது வைரலாகியிருக்கிறது.

மத்திய பிரதேசத்தின் ரேவா மாவட்டத்தில் உள்ள சிர்மோர் சவுக் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்திருப்பது தெரியவந்திருக்கிறது. அந்த இளைஞர் தனது பைக்கை ரிவர்ஸ் எடுக்க முயற்சித்திருக்கிறார். அப்போது, பைக்கின் சக்கரங்கள் சுழன்றடித்ததில் சாலையில் இருந்த சகதி அந்தப் பெண் காவலர் மீது தெறித்திருக்கிறது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண் காவலர், தனது கால்சட்டையில் சிதறியிருந்த சகதியை அகற்றி சுத்தம் செய்யுமாறு பணித்திருக்கிறார்.

அந்த இளைஞர் சிவப்பு நிறத் துணியால் அவரது கால்சட்டையைச் சுத்தம் செய்கிறார். அந்தப் பெண் காவலர் அப்படியும் கோபம் தீராமல் அந்த இளைஞரின் கன்னத்தில் அறைந்துவிட்டுச் சென்றதும் காணொலியில் பதிவாகியிருக்கிறது.

அந்தக் காவலர் ஊர்க்காவல் படையைச் சேர்ந்தவர் என்றும், ரேவா மாவட்ட ஆட்சியர் அலுவலகக் காவல் பணியில் இருப்பவர் என்றும் தெரியவந்திருக்கிறது. இந்தக் காணொலி வைரலானதைத் தொடர்ந்து அந்தப் பெண் காவலருக்குச் சமூகவலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன.

இதையடுத்து, “இதுதொடர்பாக யாரேனும் புகார் அளித்தால் விசாரணை நடத்துவோம்” என்று ரேவா காவல் துறைக் கூடுதல் கண்காணிப்பாளர் ஷிவ்குமார் கூறியிருக்கிறார்.

x