கடந்த 24 மணி நேரத்தில் 1.94 லட்சம் பேருக்குக் கரோனா தொற்று


இந்தியாவில், கடந்த 24 மணி நேரத்தில் 1,94,720 பேர் கரோனா தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். இது நேற்றைய எண்ணிக்கையைவிட 15.8 சதவீதம் அதிகம். அதேபோல், அன்றாடத் தொற்று விகிதம் 11.5 சதவீதமாகப் பதிவாகியிருக்கிறது. இந்தியாவில் 120 மாவட்டங்களில் வாராந்திர தொற்று விகிதம் 10 சதவீதமாகப் பதிவாகியிருக்கிறது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றுகளின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. இதுவரை 4,868 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிரத்தில் 1,281 பேரும், ராஜஸ்தானில் 645 பேரும் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள்.

இதுவரை 153 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், இணை நோய்கள் பாதிப்புள்ள 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்படுகின்றன. திங்கள்கிழமை (ஜன.10) முதல் பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டுவரும் நிலையில், இதுவரை 18,52,611 பூஸ்டர் டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன.

இரண்டு தவணை தடுப்பூசிகளைச் செலுத்திக்கொண்டவர்களுக்கும் ஒமைக்ரான் தொற்று ஏற்படுகிறது. இந்நிலையில், பூஸ்டர் டோஸ் செலுத்திக்கொண்டவர்களுக்கும்கூட ஒமைக்ரான் தொற்று ஏற்படும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலில் உள்ள தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தின் அறிவியல் ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் முலியல் கூறியிருக்கிறார். சளித் தொந்தரவைப் போல ஒமைக்ரான் தொற்றும் ஏற்படும் என்றும் அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

கரோனா மூன்றாவது அலையில் கரோனா தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் விரைவில் குணமடைந்துவிடுகின்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கிறது.

x