மணிப்பூரில் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்ட ஆஃப்ஸ்பா: கண்டனம் தெரிவிக்கும் காங்கிரஸ்!


மணிப்பூரில் மேலும் ஓராண்டுக்கு ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (ஆஃப்ஸ்பா) நீட்டிக்கப்படுவதாக அம்மாநில பாஜக அரசு அறிவித்திருக்கும் நிலையில், முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் இம்முடிவுக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

நாகாலாந்தில் ராணுவத்தினரால் பொதுமக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தை அடுத்து, ராணுவத்தினருக்கு அதிக அதிகாரம் அளிக்கும் ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் எனும் குரல்கள் வட கிழக்கு மாநிலங்களில் பலமாக ஒலித்துவருகின்றன.

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல், பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 என இரண்டு கட்டங்களாக நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் முக்கியப் பேசுபொருளாக ஆஃப்ஸ்பா சட்டத்தை நீக்குவது குறித்த வாக்குறுதி இடம்பிடித்திருக்கிறது. ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்துசெய்யும் கோரிக்கைதான் மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தலில், தேசிய மக்கள் கட்சி (என்பிபி) கட்சியின் முக்கிய வாக்குறுதியாக இருக்கும் என அக்கட்சியின் தலைவரும் மேகாலயா முதல்வருமான கான்ராட் சங்மா கூறியிருந்தார். காங்கிரஸ் கட்சியும் இதே வாக்குறுதியை முன்வைத்திருக்கிறது.

இந்நிலையில், இம்பால் நகராட்சிப் பகுதியைத் தவிர, ஒட்டுமொத்த மாநிலமும் பதற்றத்துக்குரிய பகுதியாக அறிவிக்கப்பட்டு, 2021 டிசம்பர் 1 முதல் ஓராண்டுக்கு ஆஃப்ஸ்பா சட்டம் நீட்டிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இதுதொடர்பாக, ஜனவரி 8-ல் மணிப்பூர் உள் துறைச் செயலாளர் எச்.க்யான் பிரகாஷ் வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு தீவிரவாத / கிளர்ச்சிக் குழுக்களின் செயல்பாடுகள் இருப்பதாக மணிப்பூர் ஆளுநர் கருதும் நிலையில், ஒட்டுமொத்த மாநிலமும் பதற்றத்துக்குரிய பகுதி எனக் கருதப்பட்டு, ஆஃப்ஸ்பா சட்டம் நீட்டிக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நேற்று (ஜன.12) இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் செயல் தலைவர் கே.மேகசந்திரா, “காங்கிரஸ் ஆட்சியில் மணிப்பூரின் 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆஃப்ஸ்பா சட்டம் நீக்கப்பட்டது. 2022 தேர்தலில் வென்று காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், ஒட்டுமொத்த மாநிலத்திலிருந்தும் இந்தச் சட்டத்தை நீக்குவது குறித்து, முதலாவது அமைச்சரவைக் கூட்டத்திலேயே முடிவுசெய்யப்படும்” என்று கூறினார்.

கடும் போராட்டங்களைத் தொடர்ந்து, 2004 ஆகஸ்ட்டில் இம்பால் மாநகராட்சியின் 7 பகுதிகளில் ஆஃப்ஸ்பா சட்டம் விலக்கிக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.

x