கங்காசாகர் மேளாவில் கரோனா தொற்று அதிகரிக்கும்: மருத்துவர்கள் எச்சரிக்கை!


இந்தியாவில் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கும் நிலையில், மேற்கு வங்கத்தின் சாகர் தீவுகளில் கங்காசாகர் மேளா ஆன்மிக நிகழ்ச்சி நடத்தப்படுவது, தொற்றுப் பரவல் கடுமையாக அதிகரிக்க வழிவகுத்துவிடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரித்திருக்கிறார்கள்.

கொல்கத்தாவிலிருந்து 130 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தத் தீவில், மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 8 முதல் 16 வரை கங்காசாகர் மேளா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. ஹரித்வார், பிரயாக்ராஜ் போன்ற புனிதத்தலங்களில் நடக்கும் கும்பமேளா நிகழ்ச்சிகளைப் போல சாகர் தீவுகளில் கங்காசாகர் மேளா நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் கலந்துகொள்வது வழக்கம்.

தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்துவரும் சூழலில், இந்நிகழ்வு குறித்துப் பலரும் அச்சம் தெரிவித்துவருகிறார்கள். குறிப்பாக, மேற்கு வங்கத்தில் கடந்த ஒரு வாரத்தில், கரோனா தொற்றுகள் 37 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஜனவரி 9-ல் மட்டும் 24,287 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக அதிகமான எண்ணிக்கை இது.

இதற்கிடையே, கரோனா பரவலைக் காரணம் காட்டி, இந்நிகழ்வுக்குத் தடை கோரி மருத்துவர் சங்கம் ஒன்று கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

எனினும், கரோனா பரவல் கட்டுப்பாட்டு வழிமுறைகள் கண்டிப்புடன் பின்பற்றப்படும் என மேற்கு வங்க அரசு உத்தரவாதம் அளித்ததை ஏற்று இந்நிகழ்வுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் குறிப்பாக, 72 மணி நேரத்துக்கு முன்பாக ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொண்டவர்களுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதைக் கண்காணிக்க மேற்கு வங்க அரசின் சார்பில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது.

எனினும், ஆற்று நீரில் புனித நீராடும் சமயத்தில் தனிமனித இடைவெளிக்கெல்லாம் சாத்தியமே இல்லை என எச்சரிக்கும் மருத்துவ நிபுணர்கள், ஒமைக்ரான் மிக வேகமாகப் பரவிவருவதையும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களும் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாவதையும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

இந்நிலையில் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மேற்கு வங்க மாநில அரசின் பெலியகாட்டா தொற்றுநோய்கள் மருத்துவமனையின் முதல்வர் டாக்டர் அனிதா ஹால்தர், “கங்காசாகர் மேளா நிச்சயம் அதீதமான பரவல் நிகழ்வாக அமைந்துவிடும். லட்சக்கணக்கானோர் ஒன்றுகூடும் நிகழ்வு என்பதால், தனிமனித இடைவெளி உள்ளிட்ட கரோனா கட்டுப்பாடுகள் மீறப்படும் என்றே நாங்கள் அச்சப்படுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

மேலும், “இந்நிகழ்வுக்குப் பிறகு, அன்றாடம் பதிவாகும் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கையானது, நாம் இப்போது பார்ப்பதைக் காட்டிலும் மிக அதிகமாகவே இருக்கும்” என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

x