சிஏஏ சட்டம் அமலாகுமா ஆகாதா?


சிஏஏ சட்டத்தை எதிர்த்து..

2019-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சிஏஏ சட்டம் அமலாகுமா ஆகாதா என்ற கேள்வி நாடெங்கும் இப்போது எழுந்துள்ளது.

பாஜக தலைமையிலான மத்திய அரசில் மிகவும் முக்கியமாகக் கருதப்பட்டது, குடியுரிமை பாதுகாப்பு சட்டம்(சிஏஎ). நாடு முழுதும் கிளம்பிய எதிர்ப்புகளை மீறி சட்டமாக்கப்பட்டும் இன்னும் அமலாகாத நிலையில் உள்ளது. அதற்கான விதிமுறைகள் வகுக்கப்படாமல் உள்ளதே அதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.

இந்த விதிமுறைகள் வகுக்க, ஒரு சட்டம் அமலாக்கப்பட்ட நாளில் இருந்து 6 மாதங்கள் வரை காலஅவகாசம் உள்ளது. இந்தக் காலஅவகாசம் 6-வது முறையாக நீட்டிக்கக் கோரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. இதற்கானக் கடிதம் மத்திய உள்துறை அமைச்சகத்தால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கான துணை நிலைக்குழுக்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனால், சிஏஏ அமலுக்கு வருமா? இல்லையா எனும் கேள்வியும் எழுந்துள்ளது.

கடந்த டிசம்பர் 11, 2019-ல் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், மறுநாளே குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற்றது. இந்தச் சட்டத்தின்படி பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் உள்ள சிறுபான்மையினரான இந்துக்கள், சீக்கியர்கள், கிறித்தவர்கள், ஜெயினர்கள், பார்சிகள் மற்றும் புத்த மதத்தினர் பலன் பெறுவார்கள். இதனால், அப்பட்டியலில் சேர்க்கப்படாத முஸ்லிம்களுக்கு எதிராக இந்த சிஏஏ பாஜகவால் அமலாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.

இதை எதிர்த்து உத்தரப் பிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் தொடங்கி வைத்தப் போராட்டம், நாடு முழுதும் பரவியது. இதில் கலவரம் உருவாகி துப்பாக்கி சூடுகளும் நடத்தப்பட்டதால் உயிரிழப்புகள், காயம் மற்றும் வழக்குப் பதிவுகள் நிகழ்ந்தன. இந்த நிலையில், சிஏஏ இன்னும் மத்திய உள்துறை அமைச்சகத்தால் செயல்பாட்டுக்கு வராமல் இருப்பது, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணியில் அரசியல் காரணங்களும் இருப்பதால், சிஏஏவை அமலாக்குவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பதாகவும் தகவல் பரவத் தொடங்கி உள்ளது.

இந்தச் சட்டம் குறிப்பாக வங்கதேசத்திலிருந்து அசாம், மேற்கு வங்க மாநிலங்களில் ஊடுருவிய முஸ்லிம்களை வெளியேற்ற திட்டமிடப்பட்டது. இவர்களை வெளியேற்ற உச்ச நீதிமன்றம் வரை தலையிட்டுக் குழுக்கள் அமைத்தும் பலன் கிடைக்காமல் இருந்தது. இதனால், கொண்டுவரப்பட்ட சிஏஏவிலும் பல சிக்கல்கள் உருவாகி விட்டன. இச்சட்டம் அமலாக்கப்பட வேண்டி எடுக்கப்படும் தேசிய குடியுரிமை பதிவேட்டுக்காக(என்ஆர்சி) சில முக்கிய தஸ்தாவேஜுகள் அவசியமாகின்றன. இதனால், வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் முஸ்லீம் அல்லாதப் பழங்குடிகள் பலரும் பாதிக்கப்படுகின்றனர்.

இவர்கள், மாநிலத் தலைவர்களை மிகவும் மதிப்பவர்கள். இந்த மாநிலத் தலைவர்களில் இருந்த பெரும்பாலான காங்கிரஸார் பாஜகவில் இணைந்துவிட்டனர். இதன்பிறகுதான் அந்தப் பழங்குடிகளின் வாக்குகள் பாஜகவுக்கு மாறியதாகத் தெரிகிறது. இதுபோன்ற காரணங்களைத் தம் தலைமையிடம் பாஜகவின் மாநிலத் தலைவர்கள் எடுத்துரைத்து வருகின்றனர். இது, அசாம், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு கிடைத்துவரும் ஆதரவுக்கு ஆபத்தாகி விடும் என்ற அச்சத்தையும் தம் தலைமையிடம் உணர்த்துகின்றனர். எனவே, சிஏஏவுக்கான விதிமுறைகளில் முஸ்லிம் அல்லாதோர் பாதிக்கப்படாமல், அதை அமலாக்க முடியுமா எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் ஆலோசிப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் சட்டம் நிறைவேறும் முன் டிசம்பர் 2, 2019-ல் ஒரு நிகழ்வில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ‘‘சிஏஏவைக் கொண்டு வராதீர், ஊடுருவியர்களை வெளியேற்றாதீர் என காங்கிரஸ் வலியுறுத்துகிறது. அட, ராகுல் பாபா நீங்கள் எதை வேண்டுமானாலும் கூறுங்கள், இது பாஜக ஆட்சியின் அரசு, பிரதமராக இருப்பது நரேந்திர மோடி. இதனால், நான் உங்கள்முன் கூறுவது என்னவெனில், 2024 மக்களவை தேர்தலுக்காக வாக்கு சேகரிக்க நாம் வருவதற்கு முன்பாக நம் நாட்டில் ஊடுருவியவர்களை சிஏஏவின்படி ஒவ்வொருவராகப் பொறுக்கி எடுத்து வெளியேற்றுவோம்” எனத் தெரிவித்திருந்தார்.

பாஜகவின் முக்கியத் தலைவரான அமித்ஷா உரையின் மூலம், சிஏஏ மீது பாஜக காட்டிய தீவிரம் புரியும். ஆனால், அதன் விதிமுறைகளை வகுக்காமல் இரண்டு வருடங்களாக நீட்டிப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. ஒருவேளை, சிஏஏவும் விவசாய சட்டத் திருத்தங்களைப் போல் வாபஸாகும் வாய்ப்புகளுக்கு வழிவகுக்குமா? எனவும் கேள்வி எழும்பியுள்ளது. இல்லையெனில், சிஏஏ அமலாக்குவதன் மீது மத்திய அரசு ஆர்வம் காட்டாமல் இருப்பது ஏன்? எனவும் கேள்விகள் முன்நிற்கின்றன.

கடந்த மே மாதம் முடிந்த மேற்குவங்க மாநில சட்டப்பேரவை தேர்தலுக்காக, பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில், சிஏஏ பற்றிய எந்தக் குறிப்புகளும் இடம்பெறவில்லை. என்ஆர்சி, சிஏஏ சட்டம் தாமதமாவதன் மீது நாடாளுமன்றத்திலும் கேரளாவின் காங்கிரஸ் எம்.பியால் ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு எழுத்து மூலம் மத்திய உள்துறை இணை அமைச்சரான நித்தியாணந்த் ராய் பதிலளித்திருந்தார். அதில் அவர், “சிஏஏ ஜனவரி 2020 முதல் அமலாக்கப்பட்டுள்ளது. இது நடைமுறைக்கு வந்தபின் அதன்படி குடியுரிமைக்காகத் தகுதியானவர்கள் மனு செய்யலாம். எஆர்சி அமலாக்கவேண்டி இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை” எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், மத்திய அரசின் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான விமர்சனங்களையும் முன்வைக்கத் தொடங்கி உள்ளனர். அதில், ‘பாஜகவினர் பேசுவது ஒன்று, செய்வது மற்றொன்று’ எனக் கிண்டலும் அடிக்கின்றனர். சிஏஏவை பொறுத்தவரை அவர்கள் அதைக் கொண்டுவராமல் இருப்பதே நல்லது எனவும், இதனால், நாட்டின் முஸ்லிம்கள் மிகவும் அச்சத்தில் இருப்பதாகவும் கருத்து கூறுகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த ஜூலையில் நாடாளுமன்றத்தில் ஒரு அறிவிப்பளித்தார். அதில், “கரோனா பரவல் காரணமாக சிஏஏவின் விதிமுறைகளை வகுப்பதில் தாமதமாகிறது. இந்தப் பரவல் முடிந்தபின், விதிமுறைகள் வகுக்கப்பட்டு விடும்” எனவும் அமைச்சர் அமித்ஷா தெரிவித்திருந்தார். தற்போது கரோனாவின் 3-வது பரவல் ஒமைக்ரான் வடிவம் கொண்டுள்ளது. மேலும், கரோனாவும், ஒமைக்ரானும் இணைந்து ‘டெல்மைக்ரான்’ எனும் புதிய வடிவில் பரவும் என்ற செய்திகளும் வெளியாகி உள்ளன.

எனவே, சிஏஏ அமலாவது இப்போதைக்கு இல்லை என்பது தெளிவாகிறது. இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் அமலாக்காமல் கைவிடப்பட்டாலும் ஆச்சரியமில்லை. ஏனெனில், இதுபோல், நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டப் பல புதிய சட்டங்களும், சட்ட திருத்தங்களும் அதன் விதிமுறைகள் வகுக்கப்படாமல், பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்து விடுவது நம் நாட்டுக்குப் புதிதல்ல எனவும் ஒரு தகவல் பரவுகிறது.

x