ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாகாலாந்தில் இரு நாட்கள் தொடர் பேரணி!


நாகாலாந்து மாநிலத்தில் ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 14 பேருக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி பல்வேறு அமைப்புகள் சார்பில் 70 கிலோமீட்டர் தொலைவுக்குத் தொடர் பேரணி நடத்தப்படுகிறது. தொடர்ந்து இரண்டு நாட்கள் நடக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் பேரணி, நேற்று (ஜன.10) தொடங்கியது. அம்மாநிலத்தின் வணிக நகரமான தீமாப்பூரிலிருந்து புறப்பட்ட இந்தப் பேரணி தலைநகர் கோஹிமா வரை செல்லும் எனத் திட்டமிடப்பட்டிருக்கிறது. பேரணியின் முடிவில், நாகாலாந்தின் இடைக்கால ஆளுநர் ஜக்தீஷ் முகியைச் சந்தித்து இது தொடர்பாக மனு அளிக்கவுள்ளனர்.

டிசம்பர் 4-ல், நாகாலாந்தின் மோன் மாவட்டத்தில், கிளர்ச்சியாளர்கள் எனத் தவறாகக் கருதி, அப்பாவிப் பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல்களில் மொத்தம் 14 பேர் கொல்லப்பட்டனர். பொதுமக்கள் திருப்பித் தாக்கியதில் ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (ஆஃப்ஸ்பா)அமலில் இருக்கும் மாநிலங்களில் ராணுவத்தினர் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது. மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்று அரசியல் சட்டம் அளிக்கும் உரிமைகளை இப்பகுதிகளில் வசிப்பவர்கள் கோர முடியாது.

இதனால், இந்தச் சட்டத்தை ரத்துசெய்யக்கோரி நாகாலாந்து உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டங்கள் நடந்துவருகின்றன. வட கிழக்கு மாநிலங்களிலிருந்து ஆஃப்ஸ்பா சட்டத்தை நீக்கக்கோரி, கோன்யாக் பழங்குடியினச் சங்கத்தினர், நாகா மக்கள் முன்னணி (என்பிஎஃப்), நாகா மாணவர் கூட்டமைப்பு (என்எஸ் எஃப்) ஆகிய அமைப்புகளுடன், ஆளுங்கட்சியான தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சியும் (என்டிபிபி) தொடர்ந்து போராட்டம் நடத்திவருகிறது.

இதற்கிடையே, நாகாலாந்தில் ஆஃப்ஸ்பா சட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்படுவதாக, டிசம்பர் 30-ல் மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து இந்தப் போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்திருக்கின்றன.

இந்நிலையில், இந்தப் பேரணிக்கு நாகா சிவில் சமூக அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. இதில் பங்கேற்க, கடந்த சில வாரங்களாக சமூக வலைதளங்களில் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

ஆஃப்ஸ்பா சட்டத்துக்கு எதிரான பதாகைகளை உயர்த்திப் பிடித்தபடி மாணவர்கள் உட்பட ஏராளமானோர் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். பல்வேறு கிராமங்களையும் நகரங்களையும் கடந்து இந்தப் பேரணி செல்லும் என்பதால், ஏராளமான ஆண்களும் பெண்களும் இதில் இணைந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக போராட்டத்தை ஒருங்கிணைக்கும் குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுதொடர்பாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்த கிழக்கு நாகா மாணவர் கூட்டமைப்பின் தலைவர் சிங்மாக் சாங், “ஆஃப்ஸ்பா சட்டத்தை விரைவில் ரத்துசெய்ய வேண்டும் என மத்திய – மாநில அரசுகளுக்கு வலியுறுத்தும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்படுகிறது. ஜனநாயக முறையில் மிகவும் அமைதியாக இந்தப் பேரணி அமைந்திருக்கிறது. ஆஃப்ஸ்பா சட்டத்துக்கு எதிரான கசப்புணர்வை வெளிப்படுத்தும் வகையிலும், நாகா மக்களின் கண்ணியத்தைக் காக்க வலியுறுத்தியும் இந்தப் பேரணி நடத்தப்படுகிறது” என்றார்.

ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என நாகாலாந்து மக்கள் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், மேலும் 6 மாதங்களுக்கு அதை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டிருப்பதைச் சுட்டிக்காட்டிப் பேசிய அவர், “இந்த முடிவு பொறுத்துக்கொள்ள முடியாது” என்றும் குறிப்பிட்டார்.

பேரணியில் கலந்துகொள்பவர்கள் கோஹிமா செல்லும் வழியில் உள்ள பிஃபேமா நகரில் நேற்று இரவு தங்குவதாகத் திட்டமிடப்பட்டது. அதன்படி பிஃபேமாவிலிருந்து இன்று காலை மீண்டும் பேரணி தொடங்குகிறது.

x