நடிகர் சித்தார்த்தை கைதுசெய்க: பாஜக நாராயணன் திருப்பதி


சித்தார்த்

‘சாய்னா நேவால் குறித்து தரம் தாழ்ந்த வகையில் பதிவிட்ட நடிகர் சித்தார்த்தை கைது செய்ய வேண்டும்’ என்று பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் மாநிலம் சென்ற பிரதமரின் பாதுகாப்பு கடந்த வாரம் கேள்வி குறியானதை அடுத்து எழுந்த சர்ச்சை குறித்து, பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால் தனது கருத்தை ட்விட்டரில் பின்வருமாறு பதிவுசெய்திருந்தார். '‘எந்த நாடும் தனது சொந்த நாட்டு பிரதமரின் பாதுகாப்பில் சமரசம் செய்துகொண்டால், அந்த நாடு பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளால் கண்டிக்கிறேன்’’ என்று சாய்னா நேவால் கூறியிருந்தார்.

அதை ரீ-ட்வீட் செய்த நடிகர் சித்தார்த், பெண்களைக் கொச்சைப் படுத்தும் வகையில் பதிலளித்ததாகக் கூறப்பட்டது. அதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தேசிய மகளிர் ஆணையத் தலைவி ரேகா சர்மா, சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்குமாறு மகாராஷ்டிரா டிஜிபிக்கு பரிந்துரைத்துள்ளார்.

நாராயணன் திருப்பதி

இதைத் தொடர்ந்து பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி, நடிகர் சித்தார்த்தை கைது செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். இதுபற்றி அவர் ட்விட்டரில், “உலகின் தலை சிறந்த இறகுப்பந்து வீராங்கனையாக இந்தியாவுக்கு பல விருதுகளை பெற்று தந்து பெருமை சேர்த்து கொண்டிருக்கிற சாய்னா நேவால் குறித்து, தரம் தாழ்ந்த வகையில் பதிவிட்ட நடிகர் சித்தார்த்தை 'பாலியல் துன்புறுத்தல் சட்டத்தில்' கைது செய்து சிறையிலடைக்க வேண்டும். இதுபோன்ற இழிசெயல்களை நடிகர் சித்தார்த் தொடர்ந்து செய்து வருகிறார். இவரின் பல அருவருப்பான, தரம்தாழ்ந்த, அநாகரீகமான பல்வேறு விமர்சனங்கள் குறித்து நான் புகார் அளித்தும் இதுவரை தமிழக காவல் துறை நடவடிக்கை எடுக்காது இருப்பது கண்டிக்கத்தக்கது. உடனடியாக அந்த நபரை கைது செய்து சிறையிலடைக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

x