பாஜகவில் சேர்கிறாரா கான்பூர் காவல் துறை ஆணையர்?


கான்பூர் காவல் துறை ஆணையர் அசீம் குமார் அருண்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், அங்கு அன்றாடம் அரசியல் பரபரப்புகள் அரங்கேறிவருகின்றன. கான்பூர் நகரக் காவல் துறை ஆணையரான அசீம் குமார் அருண், தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும் பாஜகவில் இணைவதாகவும் அறிவித்திருப்பது லேட்டஸ்ட் பரபரப்பு. கூடவே, பாஜக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் டிஜிபியுமான பிரிஜ் லாலைச் சந்தித்து அவர் வாழ்த்து பெற்ற புகைப்படமும் வைரலாகியிருக்கிறது.

உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதிகள், ஜனவரி 8-ம் தேதி அறிவிக்கப்பட்டன. அந்த அறிவிப்பு வெளியாகி அடுத்த சில நிமிடங்களில், காவல் துறை பணியிலிருந்து விருப்ப ஓய்வு கோரியிருப்பதாகவும், நாட்டுக்கும் சமூகத்துக்கும் வேறு வகையில் சேவையாற்ற விரும்புவதாகவும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டார் அசீம் குமார் அருண். பாஜகவில் தன்னை இணைத்தமைக்காக, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தார்.

அதேபோல, தன்னைச் சந்தித்து வாழ்த்துபெறும் அசீம் குமார் அருணுக்கு, இனிப்பு வழங்கும் படத்தை பிரிஜ் லால் ட்விட்டரில் நேற்று வெளியிட்டிருந்தார். 2011 -12 காலகட்டத்தில் டிஜிபியாக இருந்தவர் பிரிஜ் லால்.

1994 பேட்சைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான அசீம் குமார் அருண், 2021 முதல் கான்பூர் நகர காவல் துறை ஆணையராகப் பணியாற்றிவருகிறார். இன்னும் 8 வருடப் பணி வாழ்க்கை மிச்சம் இருக்கும் நிலையில், விருப்ப ஓய்வு கோரியிருப்பதாக அறிவித்திருக்கிறார். இப்போது வரை உத்தரப் பிரதேச காவல் துறை இணையதளத்தில் அவர் கான்பூர் காவல் துறை ஆணையர் என்றே குறிப்பிடப்படுகிறார்.

பாஜக எம்.பி, பிரிஜ் லாலிடம் வாழ்த்து பெறும் அசீம் குமார் அருண்

கன்னோஜ் மாவட்டத்தைச் சேர்ந்தவரான அசீம் குமார் அருணின் தந்தை ஸ்ரீராம் அருண், டிஜிபியாகப் பதவிவகித்தவர். எனவே, கன்னோஜ் மாவட்டத்தின் ஏதேனும் ஒரு தொகுதியில் அசீம் குமார் வருண் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

உத்தரப் பிரதேசக் காவல் துறையின் பயங்கரவாத எதிர்ப்புப் படையின் தலைவராகவும், அவசரகால உதவி எண்ணான 112-ஐ நிர்வகிக்கும் குழுவின் தலைவராகவும் பணியாற்றிய அசீம் குமார் அருண், ஊடகத் துறையிலும் பணியாற்றியவர். தொலைக்காட்சி சேனல் ஒன்றில் நிருபராக ஓராண்டு பணிபுரிந்த அனுபவம் அவருக்கு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, அவர் அரசியலில் குதிப்பது உறுதியானால் ஊடகவியலாளர் - காவல் துறை அதிகாரி - அரசியல்வாதி என மூன்று துறைகளிலும் பணியாற்றிய பெருமை அவருக்குக் கிடைக்கும்!

x