இந்தியாவின் ஒருநாள் கரோனா பாதிப்பு 1.5 லட்சத்தை தாண்டியது


இந்தியாவில் கடந்த 24மணி நேரத்தில் 1,59,632 பேர் கரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். சிகிச்சையில் இருந்தவர்களில் 327 பேர் பலியாகி உள்ளனர். குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 40,863. இவை இன்றைய(ஜன.9) காலை நிலவரமாகும்.

கரோனா தொற்றுப்பரவல் அதிகரிப்பதை தடுப்பதற்காக பல்வேறு மாநிலங்களும் பொதுமுடக்கம் வரையிலான தீவிர கட்டுப்பாடுகளில் இறங்கி உள்ளன. தமிழகத்தில் ஞாயிறு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது போல டெல்லி, கர்நாடகாவிலும் வார இறுதிக்கான ஊரடங்கு விதிக்கப்பட்டது. மகாராஷ்டிராவில் சனி இரவு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நாகாலந்தில் இரவு ஊரடங்கு மற்றும் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஜன.31 வரை விடுப்பு அளித்தும் உள்ளது. கட்டுக்கடங்காது செல்லும் கரோனாவால் அதிகரிக்கும் நோயாளிகளை எதிர்கொள்ள ஏதுவாக, மருத்துவமனை படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரித்து வருகிறது. இமாச்சலில் ஜன.26 வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

கான்பூர் ஐஐடி பேராசிரியரும் கணித ஆய்வாளருமான மஹிந்திரா அகர்வால் என்பவர், கரோனா தொற்று அதிகரித்து வரும் மும்பை மற்றும் டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களே மூன்றாம் அலையின் இந்திய பாதிப்பை அதிகமாக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த பெருநகரங்களில் முன்னெப்போதும் இல்லாத வகையிலான பெரும் உச்சத்தை, வரும் வாரத்தில் கரோனா பரவல் தொட இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தினசரி உறுதி செய்யப்படும் தொற்றாளர் எண்ணிக்கையை 8 லட்சத்துக்கும் மேலாக உயர்த்தும் என்று அவரது கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன. இது கடந்த இரண்டாம் அலை பாதிப்பை விட 2 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த உயர்வே, மூன்றாம் அலையின் உச்சத்தை பிப்ரவரி மாதத்தில் எட்டவும் காரணமாகும் என்றும் மஹிந்திரா அகர்வால் எச்சரித்துள்ளார்.

x