பிரதமரின் பாதுகாப்பில் மீறல்: பின்னணியும் பின்விளைவுகளும்!


ஜனவரி 5-ம் தேதி காலை 10.25 மணி. பஞ்சாபின் பதிண்டா விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் விமானம் தரையிறங்குகிறது. 42,750 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களை, பிரதமர் மோடி தொடங்கிவைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஃபெரோஸ்பூர் எல்லையில் ஹுசைனிவாலாவில் உள்ள தியாகிகள் நினைவிடத்துக்கு அவர் ஹெலிகாப்டரில் செல்லவும் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் பயணம் ரத்துசெய்யப்பட்டு காரில் பயணம் செய்வது என முடிவெடுக்கப்படுகிறது.

10.45 மணிக்கு, சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் (எஸ்பிஜி) வாகனங்கள் புடைசூழ பிரதமரின் வாகனம் கிளம்புகிறது. ஆனால், நினைவிடத்துக்கு 30 கிலோமீட்டர் முன்பாகவே, பியாரென்னா கிராமம் அருகில் உள்ள மேம்பாலத்தில், பிரதமர் சென்ற வாகனம் நிறுத்தப்படுகிறது. அப்போது மணி நண்பகல் 1. அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் நடத்திய போராட்டத்தால், 20 நிமிடங்களுக்கு அவரது வாகனம் மேம்பாலத்திலேயே காத்திருக்கிறது. பின்னர், மீண்டும் விமான நிலையம் சென்றடைகிறார். அப்போது மணி மாலை 3.30. அடுத்த சில மணி நேரங்களில் அவரது விமானம் டெல்லி நோக்கிப் பறக்கிறது. அன்று நிகழ்ந்த சம்பவங்களின் வழியே சூல் கொண்ட அரசியல் சூறாவளி, நாளுக்கு நாள், நிமிடத்துக்கு நிமிடம் என பல்வேறு திசைகளில் சுழன்றடித்துக்கொண்டே இருக்கிறது.

கோபம் தணியாத பஞ்சாப் விவசாயிகள்

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, குறிப்பாக வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டாக விவசாயிகள் நடத்திய போராட்டம், வேளாண் சட்டங்கள் ரத்துசெய்யப்படுவதாக, குரு நானக் ஜெயந்தி தினமான நவம்பர் 19-ல் அறிவித்தது ஆகிய நிகழ்வுகளுக்குப் பின்னர் பஞ்சாப் மாநிலத்துக்குப் பிரதமர் மேற்கொண்ட முதல் பயணம் இது. அவர் பஞ்சாப் வருகிறார் எனும் அறிவிப்பு வந்ததுமே, பஞ்சாப் விவசாயிகள் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்த முடிவெடுத்துவிட்டனர். வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்தை மோடி அரசு எதிர்கொண்ட விதம், போராட்டக் களத்தில் 700 விவசாயிகள் உயிரிழந்தது, லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கொல்லப்பட்ட சம்பவத்தில் மத்திய உள் துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவைப் பதவியிலிருந்து விலக்காதது எனப் பல விஷயங்களால் விவசாயிகள் அதிருப்தியில் இருந்தனர்.

பிரதமரின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமங்களிலும், நகரங்களிலும் போராட்டம் நடத்தப்போவதாக ஏற்கெனவே விவசாயிகள் அறிவித்திருந்தனர். பாரதிய கிஸான் சங்கம் (கிராந்திகாரி), பிகேயூ (டக்காகுண்டா) உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட விவசாயச் சங்கங்கள் இதற்கான அழைப்பு விடுத்திருந்தனர். இதில், பாரதிய கிஸான் சங்கம் (கிராந்திகாரி) அமைப்பினர் நடத்திய போராட்டத்தால்தான் மோடியின் பயணம் தடைபட்டது. ஆக, கடைசி நிமிடத்தில் வளர்ச்சித் திட்டங்களை பாதுகாப்பில் மீறல் ஏற்பட்டதாகவும், அவரைக் கொலை செய்யும் நோக்கம் காங்கிரஸாருக்கு இருந்ததாகவும் கடும் குற்றச்சாட்டுகளை பாஜகவினர் முன்வைக்க, பதிலுக்கு, மோடியின் கூட்டத்தில் பங்கேற்க போதிய கூட்டம் வராததால் கூட்டத்தை ரத்துசெய்ய சாக்குப்போக்காக இப்படி ஒரு புகாரை பாஜக முன்வைப்பதாகப் பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியும் காங்கிரஸாரும் விமர்சித்துவருகிறார்கள். ஆனால், பல இடங்களில் பாஜகவினர் சென்ற பேருந்துகளைப் பஞ்சாப் காவல் துறையினர் தடுத்து நிறுத்திவிட்டதாக, அக்கட்சியின் மாநிலத் தலைவர்கள் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

இதற்கிடையே, கட்சிக்கொடி சகிதம் மோடி வாழ்க என முழக்கமிடும் பாஜகவினர் தான் மோடியின் கார் அருகே நெருங்கிச் சென்றனர் என்பதைக் காட்டும், பல்வேறு காணொலிகளை விவசாயிகள் வெளியிட்டு பாஜகவுக்குப் பதிலடி கொடுத்துவருகிறார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி

இவ்விஷயத்தில் ஒட்டுமொத்தமாகக் காங்கிரஸை பாஜகவினர் குற்றம்சாட்டிவந்தாலும், மோடியின் பாதுகாப்பு விஷயத்தில் எந்த இடைவெளியும் இருக்கக்கூடாது என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனக்கு அறிவுறுத்தியதாக சரண்ஜீத் சிங் சன்னி கூறியிருக்கிறார்.

“பதிண்டா விமான நிலையத்துக்கு உயிருடன் திரும்பி வந்துவிட்டேன் என உங்கள் முதல்வரிடம் நன்றி தெரிவித்துவிடுங்கள்” என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கூறியதாக வெளியான செய்தியையும் காங்கிரஸ் கட்சியினர் ஏற்கவில்லை. அப்படி அவர் சொல்லியிருக்க மாட்டார் என்றே காங்கிரஸில் ஒரு தரப்பினர் சொல்லிவருகிறார்கள். இவ்விஷயத்தில் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் கருத்துவேறுபாடுகள் உருவானது தனிக்கதை.

பிரதமரின் நலனுக்காக பாஜகவினர் யாகம் வளர்த்து வேண்டிக்கொண்டிருக்க, இன்னொருபுறம் பிரதமரே நேரடியாகக் குடியரசுத் தலைவரைச் சந்தித்து, பஞ்சாபில் நிகழ்ந்தவற்றைப் பற்றிச் சொல்லி முறையிட்டார்.

வாதப் பிரதிவாதங்கள்

பிரதமருக்கான எஸ்பிஜி பாதுகாப்பைப் பொறுத்தவரை, மாநில போலீஸ் என்ன சொல்கிறதோ அதன் அடிப்படையில்தான் எஸ்பிஜி செயல்படும். குறிப்பாக, டிஜிபி தான் பொறுப்பு என்கிறது எஸ்பிஜியின் சட்டவிதிகள் அடங்கிய ‘ப்ளூ புக்’. பயணத் திட்டம் மாறும்போதும் அதற்கேற்ப வியூகங்களை வகுத்து ஏற்பாடு செய்துதர வேண்டியது மாநிலக் காவல் துறையினரின் பொறுப்பு. ஆனால், எஸ்பிஜி சொல்வதன் அடிப்படையில்தான் காவல் துறை செயல்பட முடியும் என வாதிடுகிறது பஞ்சாப் அரசு. இப்படி ஏகப்பட்ட வாதப் பிரதிவாதங்கள். இவ்விஷயத்தில் உளவுத் துறையினர் மீதோ எஸ்பிஜி படையினர் மீதோ குற்றம்சாட்டாமல், பஞ்சாப் காவல் துறையையும் மாநில அரசையும் நோக்கி மட்டும் குற்றம் சாட்டுவது ஏன் என்பது பஞ்சாப் அரசுத் தரப்பின் வருத்தம்.

பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி

இந்த விவகாரத்தில் நடந்தவை குறித்து விசாரிக்க பஞ்சாப் மாநில அரசும், மத்திய உள் துறை அமைச்சகமும் தனித்தனியாகக் களமிறங்கியிருந்தன. பஞ்சாப் அரசின் சார்பில் 3 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. இதற்கிடையே, இதுதொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் அந்த விசாரணைகளை ஜனவரி 10 வரை நிறுத்திவைத்து உத்தரவிட்டிருக்கிறது. பிரதமரின் பஞ்சாப் பயணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தனது பாதுகாப்பில் வைத்திருக்குமாறு பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் பதிவாளருக்கு உத்தரவிட்டிருக்கிறது. ஆக, என்ன நடந்தது என்பதற்கான ஆதாரபூர்வமான தகவல்கள் இனிமேல்தான் வெளிவரும். அதுவரை புகார் கணைகள் இருதரப்பிலிருந்தும் பாய்ந்துகொண்டிருக்கும்.

பாதுகாப்பற்ற மாநிலமா பஞ்சாப்?

பிரதமரின் உயிருக்கு ஆபத்து எனும் குற்றச்சாட்டு புதிதாகப் பஞ்சாபை நோக்கி நீண்டுவிடவில்லை. 1984-ல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில், பொற்கோயிலில் அவரது உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ நடவடிக்கை இருப்பதை இன்று பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள். 1980-களில் உருவான காலிஸ்தான் இயக்கம், ஒடுக்கப்பட்டுவிட்ட நிலையில் மீண்டும் தலையெடுக்கும் வாய்ப்பு இருப்பதாகப் பல்வேறு புகார்கள் எழுந்திருக்கின்றன.

லூதியானா மாவட்ட நீதிமன்ற குண்டுவெடிப்பில் சேதமடைந்த கட்டிடம்...

பஞ்சாப் எல்லையில் பாகிஸ்தானிலிருந்து ட்ரோன்கள் மூலம் ஆயுதங்களும் போதைப்பொருட்களும் கடத்தப்படுவதாகத் தொடர்ந்து செய்திகள் வெளியாகின்றன. 2021 டிசம்பர் 3-ல், எல்லையில் உள்ள குர்தாஸ்பூர் மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் டிபன் பாக்ஸ் வெடிகுண்டுகள் ட்ரோன்கள் மூலம் அனுப்பப்பட்டது தெரியவந்தது. ஃபெரோஸ்பூரிலிருந்துகூட ஒரு டிபன் பாக்ஸ் வெடிகுண்டு கைப்பற்றப்பட்டது. லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பை நிகழ்த்தியவர், உடலில் ஆர்டிஎக்ஸ் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகளை வெடிக்கச்செய்தார். அந்த ஆர்டிஎக்ஸ் பாகிஸ்தானிலிருந்து காலிஸ்தான் இயக்கத்தினரால் கொண்டுவரப்பட்டது என்றே கருதப்படுகிறது.

அமிர்தசரஸ் பொற்கோயில், கபூர்தலா ஆகிய இரண்டு இடங்களில் மத அவமதிப்பு நிகழ்வுகளும், அதன் காரணமாகக் கும்பல் கொலைகளும் நிகழ்ந்தது இன்றுவரை பேசுபொருளாக இருக்கின்றன. பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து காரணமாக ஏற்கெனவே பஞ்சாப் காங்கிரஸில் பல்வேறு குடைச்சல்கள் நிலவுகின்றன. இதனால், சரண்ஜீத் சிங்கின் அரசு பலவீனமான அரசு எனும் விமர்சனங்கள் தலைதூக்கியிருக்கின்றன. இந்தச் சூழலில், பிரதமரின் பாதுகாப்பில் மீறல் நிகழ்ந்த சம்பவம் பஞ்சாப் காங்கிரஸ் அரசுக்குக் கூடுதல் நெருக்கடி தந்திருக்கிறது.

தேர்தலில் எதிரொலிக்குமா?

இது பஞ்சாப் உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் காலம். எனவே, தேர்தல் பிரச்சாரங்களில் இந்த விவகாரம் சூடுபிடிக்கும். பஞ்சாபின் சட்டம் - ஒழுங்கு / பாதுகாப்பு குறித்து தொடர்ந்து குற்றம்சாட்டிவந்த முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங், இப்போது சரண்ஜீத் சிங் அரசைச் சகட்டுமேனிக்கு விமர்சித்துவருகிறார். பாஜகவுடன் கைகோத்து அவரது பஞ்சாப் லோக் காங்கிரஸும், சிரோமணி அகாலி தளம் (சன்யுக்தா) கட்சியும் களமிறங்குகின்றன. பாஜகவைப் பொறுத்தவரை பஞ்சாபில் இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், பிரதமரின் உயிருக்கு அச்சுறுத்தல் எனும் பதத்தை வைத்து மற்ற அனைத்து மாநிலங்களிலும் வாக்குகளைத் திரட்ட முடியும்.

பிரதமர் மோடியுடன் கேப்டன் அமரீந்தர் சிங்

இதற்கிடையே 5 மாநிலத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், இனி வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைக்க முடியாது. ஆனால், பிரச்சாரத்துக்குச் செல்ல முடியும். மீண்டும் பஞ்சாபுக்குத் தேர்தல் பிரச்சாரம் செய்ய மோடி செல்வாரா என்பது முக்கியமான கேள்வி. நாட்டில் கரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், ஜனவரி 15 வரை தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களுக்குத் தேர்தல் ஆணையம் தடை விதித்திருக்கிறது. அதன் பின்னர் மோடியின் திட்டம் எப்படி இருக்கும் என்பதைச் சொல்ல முடியாது. எது எப்படி இருந்தாலும், கோடிக்கணக்கான மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் மோடி தொடங்கிவைக்கவிருந்த நிலையில் அதைக் காங்கிரஸ் அரசு சதி செய்து தடுத்துவிட்டது என்றே பாஜகவின் பிரச்சாரம் அமையும். அதை எதிர்கொள்வதும் காங்கிரஸுக்குச் சவாலாக இருக்கும்.

எல்லாவற்றையும் தாண்டி, அரசியல் வேறுபாடுகளைக் கடந்து நாட்டின் பிரதமரின் பாதுகாப்பில் ஏற்பட்ட மீறல் என்பதால், பஞ்சாப் காங்கிரஸ் அரசின் சமாளிப்பு முயற்சிகள் அனைத்தும், மக்கள் மத்தியில் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியிருக்கின்றன. அதன் விளைவையும் காங்கிரஸ் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்!

x