பூஸ்டர் டோஸ்க்காகப் புதிதாக ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டியதில்லை!


இந்தியாவில் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது. நேற்று (ஜன.7) மட்டும் மட்டும் புதிதாக 1,17,100 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இது வியாழக்கிழமையில் பதிவான தொற்றுகளைவிட 28 சதவீதம் அதிகம். டெல்லியில் 24 மணி நேரத்தில் 17,335 பேருக்குத் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மூன்றாவது முன்னெச்சரிக்கை டோஸ் என அழைக்கப்படும் பூஸ்டர் டோஸ்கள், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், கூட்டுநோய் பாதிப்பு கொண்ட 60 வயதுக்கு மேற்பட்டோர் ஆகியோருக்கு ஜனவரி 10 முதல் செலுத்தப்படவிருக்கின்றன.

இந்நிலையில், இதற்காக ஆன்லைனில் பதிவுசெய்யலாம் அல்லது நேரடியாகவே தடுப்பூசி மையத்தை அணுகலாம் என சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது. கோவின் செயலியில் புதிதாகப் பதிவுசெய்ய வேண்டிய அவசியம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட 39 வாரங்கள் கழித்து மூன்றாவது முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

x