குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர பாஜக சதி!


பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி

பஞ்சாபில், விவசாயிகள் போராட்டம் காரணமாகப் பிரதமர் மோடியின் கார் மேம்பாலத்தில் நிறுத்தப்பட்ட நிகழ்வை வைத்து அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியைக் கொண்டுவர பாஜக சதிசெய்வதாக, அம்மாநில முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி குற்றம்சாட்டியிருக்கிறார்.

பஞ்சாபில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் ஏற்பட்ட மீறல் சம்பவத்தை வைத்து காங்கிரஸ் மீது பகீர்க் குற்றச்சாட்டுகளை பாஜகவினர் சுமத்திவருகிறார்கள். இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பாஜக எம்.பி-க்கள் இன்று நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு கூடி, போராட்டம் நடத்தினர். பிரதமர் மோடியைக் கொல்ல பஞ்சாப் அரசும், காங்கிரஸ் மூத்த தலைவர்களும் சதி செய்ததாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

இந்நிலையில், பாஜகவுக்குப் பதிலடி கொடுத்துவருகிறார் சரண்ஜீத் சிங் சன்னி. “இது பஞ்சாபையும் பஞ்சாபியர்களின் தனித்துவத்தையும் அவமதிக்கும் சதித்திட்டம். மாநிலத்தின் சூழலைக் கெடுக்கும் முயற்சி. பஞ்சாபில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் முயற்சி” என்று என்டிடிவி செய்தி சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

“பிரதமரைக் காக்க துப்பாக்கி குண்டைக்கூட எதிர்கொள்ளத் தயார் என்று ஏற்கெனவே கூறியிருந்தேன். இதையும் தாண்டி வேறு என்ன நான் செய்ய வேண்டும்? என் மணிக்கட்டை அறுத்துக்கொள்ள வேண்டுமா?” என்றும் அவர் ஆவேசமாகக் கேட்டிருக்கிறார்.

ஃபெரோஸ்பூரில் பிரதமர் மோடி கலந்துகொள்ளவிருந்த நிகழ்ச்சியில், எதிர்பார்த்த கூட்டம் வராததாலேயே, அதை திசைதிருப்ப இப்படியான குற்றச்சாட்டை பாஜக முன்வைப்பதாகத் தொடர்ந்து குற்றம்சாட்டிவரும் சரண்ஜீத் சிங், இவ்விவகாரத்தில் பாஜகவினர் நாட்டைத் தவறான திசையில் கொண்டுசெல்வதாகவும் விமர்சித்திருக்கிறார்.

x