பஞ்சாப்: பிரதமர் பயணத் திட்டத்தில் பாதுகாப்புக் குறைபாடு!


பல்வேறு நலத்திட்டங்களைத் தொடங்கிவைக்க, இன்று பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூர் சென்றிருந்த பிரதமர் மோடி, தியாகிகள் நினைவிடத்துக்குச் சாலைமார்க்கமாகச் சென்றபோது மேம்பாலத்தில் விவசாயிகளின் பேரணி நடத்திய போராட்டத்தால் 20 நிமிடங்கள் காரிலேயே காத்திருக்க நேர்ந்தது. இது மிகப் பெரிய விவகாரமாக உருவெடுத்திருக்கிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளில் நிகழ்ந்த மிகப் பெரிய குறைபாடு இது என விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன. இவ்விஷயத்தில் பஞ்சாப் காங்கிரஸ் அரசு மீது, குறிப்பாக அம்மாநில முதல்வர் சரண் ஜீத் சிங் சன்னி மீது பாஜக சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது.

“பதிண்டா விமான நிலையத்துக்கு உயிருடன் திரும்பி வந்துவிட்டேன் என உங்கள் முதல்வரிடம் நன்றி தெரிவித்துவிடுங்கள்” என்று பாதுகாப்பு அதிகாரிகளிடம் பிரதமர் மோடி கூறியதாக வெளியாகியிருக்கும் செய்தி, இந்த விவகாரத்தின் தீவிரத்தன்மையை உணர்த்துகிறது.

பஞ்சாப் மாநிலத்தில், 42,750 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான வளர்ச்சித் திட்டங்களை, பிரதமர் மோடி இன்று தொடங்கிவைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இன்று காலை ஃபெரோஸ்பூரில் உள்ள பதிண்டா விமான நிலையத்துக்கு மோடி வந்து சேர்ந்தார். பெரும்பாலும் ஃபெரோஸ்பூர் வரும் தலைவர்கள், ஹுசைனிவாலா எல்லையில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்துக்குச் சென்று அஞ்சலி செலுத்துவது வழக்கம். தேச விடுதலைக்காகப் போராடி லாகூர் சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட பகத் சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் நினைவைப் போற்றும் வகையில் அந்த நினைவிடம் அமைக்கப்பட்டது.

இந்நிலையில், ஹெலிகாப்டர் மூலம் அந்த இடத்துக்குப் பிரதமர் மோடி முதலில் செல்வார் என்றும், அதன் பின்னர், ஃபெரோஸ்பூரில் 490 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பிஜிஐ செயற்கைக்கோள் மையம், கபூர்தலாவில் மருத்துவக் கல்லூரி ஆகிய திட்டங்களைத் தொடங்கிவைப்பார் என்றும் திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், இன்று காலை அங்கு மழை பெய்துகொண்டிருந்ததாலும் வானிலை மோசமாக இருந்ததாலும், ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொள்வதற்காக, சுமார் 20 நிமிடங்கள் விமான நிலையத்திலேயே பிரதமர் மோடி காத்திருந்தார். அதன் பின்னர், சாலைவழியாகவே தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்வது என முடிவெடுக்கப்பட்டது.

இதையடுத்து, சிறப்புப் பாதுகாப்புப் படையினரின் (எஸ்பிஜி) வாகனங்கள் புடைசூழ பிரதமரின் கார் அந்த இடத்துக்குச் சென்றுகொண்டிருந்தது. ஆனால், நினைவிடத்திலிருந்து ஏறத்தாழ 30 கிலோமீட்டர் முன்பாகவே ஒரு மேம்பாலத்தில் பிரதமரின் வாகனப் பேரணி வந்துகொண்டிருந்தபோது, அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக விவசாயிகள் சென்ற வாகனங்கள் மேம்பாலத்தில் குறுக்கிட்டன எனத் தெரிகிறது. இதனால், பிரதமரின் வாகனம் மேம்பாலத்திலேயே நிறுத்தப்பட்டது. சுமார் 20 நிமிடங்கள் அவர் காரிலேயே காத்திருக்க நேரிட்டது. இந்தச் சம்பவத்தால், பெரும் பதற்றம் உருவானது.

பிரதமரின் வருகைக்கு எதிராக விவசாயிகள் ஏற்கெனவே குரல் கொடுத்துவந்தனர். இதனால், ஃபெரோஸ்பூரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ‘கோ பேக் மோடி’ முழக்கத்துடன் விவசாயிகள் போராட்டம் நடத்தலாம் என ஏற்கெனவே எதிர்பார்க்கப்பட்டதால், நேற்று இரவு முதல் பஞ்சாப் போலீஸார் அந்நகர் முழுவதும் கண்காணிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். விவசாயிகளிடம் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தியிருந்த போலீஸார், துப்பாக்கிகளைக் கொண்டுவரவில்லை. லத்தி மட்டுமே வைத்திருந்தனர். ஏறத்தாழ 10,000 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்கின்றன இந்தி ஊடகங்கள்.

எல்லாவற்றையும் தாண்டி, பிரதமர் மோடி செல்லும் பாதையே இப்படி முடக்கப்படும் என யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. இது பாகிஸ்தான் எல்லைக்கு அருகில் இருக்கும் பகுதி; சமீபத்தில் லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு நடந்தது. இதுபோன்ற காரணிகளின் அடிப்படையில் பலருக்கும் பதற்றம் தொற்றிக்கொண்டது. மேம்பாலம் அருகில் இருக்கும் வீடுகள், கட்டிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கவில்லை என்பதையும் ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

அரசியல் மனமாச்சரியங்களைக் கடந்து, நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு விஷயத்தில் இத்தனை பெரிய குறைபாடு ஏற்பட்டது எப்படி என்பதுதான் முக்கியமான கேள்வி. ஹெலிகாப்டர் பயணத்தைத் தவிர்த்து, சாலை வழியாகச் செல்வது என முடிவெடுக்கப்பட்டதும், எஸ்பிஜி அதிகாரிகள் பஞ்சாப் காவல் துறை டிஜிபியைத் தொடர்புகொண்டு இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய உத்தரவிட்டிருந்தனர். மாற்று வழியாக இரண்டு அல்லது மூன்று வழிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றில் மிகவும் பாதுகாப்பான பாதை என ஒரு பாதை இறுதிசெய்யப்பட்டிருக்க வேண்டும். அப்படி இருக்கையில், மேம்பாலத்துக்கு இத்தனை விவசாயிகள் வாகனங்களில் வந்து சேர்ந்தது எப்படி என்பது முக்கியமான கேள்வியாக உருவெடுத்திருக்கிறது.

“தேர்தலில் பெரும் தோல்வி கிடைக்கும் என்று பயந்த பஞ்சாப் காங்கிரஸ் அரசு, அம்மாநிலத்தில் பிரதமரின் நிகழ்ச்சிகளுக்கு முட்டுக்கட்டை ஏற்படுத்த எல்லாத் தந்திரங்களையும் பிரயோகித்திருக்கிறது” எனச் சீற்றத்துடன் ட்வீட் செய்திருக்கிறார் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா. அதுமட்டுமல்ல, பிரதமர் மேம்பாலத்தில் காத்திருந்த நேரத்தில் பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னியைத் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது அவர் அழைப்பை ஏற்கவில்லை என்றும் ஜே.பி.நட்டா கூறியிருக்கிறார். பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகளில் ஏற்பட்ட குறைபாட்டை மத்திய உள் துறை அமைச்சகமும் கேள்விக்குட்படுத்தியிருக்கிறது.

மேம்பாலத்தில் காத்திருக்கும் பிரதமரின் கார்

“பிரதமரின் பயணத் திட்டம் குறித்து பஞ்சாப் அரசுக்கு முன்பே தெளிவாகத் தெரிவிக்கப்பட்டுவிட்டது. அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும், மாற்று ஏற்பாடுகளையும் அவர்கள் செய்திருக்க வேண்டும். மாற்றுத் திட்டத்தைக் கருத்தில் கொண்டு, சாலைகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். ஆனால், கூடுதலான போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை” என்று உள் துறை அமைச்சகம் கூறியிருக்கிறது.

ஆனால், இந்த விவகாரத்தைக் காங்கிரஸார் கையாளும் விதமும் விமர்சனங்களுக்குரியதாகவே இருக்கிறது. இத்தனை நாட்கள் சாலையில் விவசாயிகள் போராடியதையும், லக்கிம்பூர் கெரியில் விவசாயிகள் கார் ஏற்றிக்கொல்லப்பட்ட சம்பவத்தில் கைதான ஆசிஷ் மிஸ்ராவின் தந்தையும், மத்திய உள் துறை இணை அமைச்சருமான அஜய் மிஸ்ரா ஏன் இன்னமும் பதவியில் நீடிக்க அனுமதிக்கப்படுகிறார் எனும் கேள்வியையும்தான் பஞ்சாப் காங்கிரஸார் முன்வைக்கின்றனர்.

பஞ்சாப் முதல்வர் சரண் ஜீத் சிங் சன்னி

பஞ்சாப் முதல்வர் சரண் ஜீத் சிங் சன்னியும், “இதை ஏன் பாதுகாப்புப் பிரச்சினையுடன் தொடர்புபடுத்துகிறீர்கள்? ஏன் அரசியல் பிரச்சினையாக்குகிறீர்கள்?” எனச் செய்தியாளர் சந்திப்பின்போது கூறியிருக்கிறார். “போராட்டம் நடத்தியது விவசாயிகள்தான். அவர்கள் பயங்கரவாதிகள் அல்ல” என்றும் அவர் கூறியிருக்கிறார்.

ஜே.பி.நட்டாவின் புகார்கள் குறித்து விளக்கமளித்த அவர், “எனக்கு உள் துறை அமைச்சர் அமித் ஷாவின் போன் வந்தது. எங்கள் தரப்பில் தவறு ஏதும் நடக்கவில்லை என அவரிடம் விளக்கமளித்தேன். வேறு யாரிடமிருந்தும் அழைப்பு வரவில்லை” என்று கூறினார்.

பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினை பூதாகரமாக வெடிக்கும் என்றே தெரிகிறது.

x