நகரக் குடிசைவாசிகளுக்கு அவரவர் வாழ்விடத்தில் நிலம்: நவீன் பட்நாயக்கின் அடுத்த சிக்ஸர்!


மாநில வளர்ச்சியில் அதிக அக்கறையுடன் செயல்படும் முதல்வர்களில் முன்னணி இடம் வகிப்பவர் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக். அடுத்தடுத்து பல்வேறு நலத்திட்டங்களை அறிமுவப்படுத்திவரும் அவர், மாநிலத்தின் 5 மாநகரங்களில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்கு நிலம் வழங்கவும் நடவடிக்கை எடுத்திருக்கிறார். அவருடைய தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை (டிச.31) கூடிய மாநில அமைச்சரவை இந்தப் புதிய முடிவை எடுத்திருக்கிறது. அதைவிட முக்கியம், இந்தத் திட்டம் குறித்து அவருடைய அரசு தெரிவித்துள்ள ஒரு மனிதாபிமானமுள்ள கருத்துதான்.

நகர்ப்புறங்களில் நிலங்களுக்கான மதிப்பு உயர்ந்துகொண்டே வருவதால் ஏதாவதொரு காரணத்தைச் சொல்லி குடிசைவாழ் மக்களை நகரின் மையத்திலிருந்து அப்பாலுள்ள இடத்தில் கொண்டுபோய் குடியமர்த்துவதுதான் பல மாநிலங்களில் நடக்கிறது. இங்குதான் தனித்துவம் காட்டுகிறார் நவீன் பட்நாயக். அவரவர் வாழ்ந்த இடத்திலேயே நிலம் ஒதுக்கும் மனிதாபிமான முடிவை எடுத்திருக்கிறது. நிலங்களின் சந்தை மதிப்பைவிட, அந்த நிலங்களில் வாழும் மனிதர்களின் மதிப்பு அதிகம் என்று கருதுவதால் அரசு இந்த முடிவை எடுத்திருப்பதாக விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

சகல வசதிகளும் கிடைக்கும்

2.4 லட்சம் குடிசைவாழ் குடும்பங்களுக்கு இந்த நிலங்கள் பட்டா செய்து வழங்கப்படும். இதன் மூலம் அந்தக் குடும்பங்களைச் சேர்ந்த 9.7 லட்சம் பேர் பயன் அடைவர். வெறும் நிலங்களை மட்டும் ஒதுக்கிவிடாமல் அங்கே குடிநீர், கழிப்பறைகள், பூங்கா, விளையாட்டுத் திடல், தெரு விளக்குகள், அகலமான வீதிகள், கண்ணியமான வாழ்க்கைக்கான அடித்தளக் கட்டுமான வசதிகளையும் அரசு செலவிலேயே செய்து தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கூடங்கள், பால்வாடி, ஆரம்ப சுகாதார நிலையங்கள், நூலகம், குடிமைப்பொருள் வழங்கும் அங்காடிகள் என்று அப்பகுதிவாசிகள் வேறிடங்களுக்கு அலைய வேண்டிய தேவை இல்லாமல் அனைத்தும் அங்கேயே தரப்படும்.

அவசரச் சட்டம்

இந்த நல்ல திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற அவசரச் சட்டம் இயற்றப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் 45 சதுர மீட்டர் (கவனிக்க - அடி அல்ல) இடம் தரப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு வழங்கப்படுவதைப்போல இந்த நிலங்கள் இருக்கும். ஏற்கெனவே குடிசைவாசி குடியிருக்கும் நிலப்பரப்பு 30 சதுர மீட்டருக்கும் குறைவாக இருந்தால், அருகில் இருப்பது மாநகராட்சிக்குச் சொந்தமான இடமென்றால் பற்றாக்குறைக்கு மாநகராட்சியின் இடம் தந்து உதவப்படும்.

இந்த அவசரச் சட்டமானது, நிலங்களில் குடியிருப்பவர்கள் மத்திய, மாநில அரசுகளின் எந்தத் திட்டத்தின் கீழும் நிதியுதவி பெற்று வீடு கட்டிக்கொள்ள ஏதுவாகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்ல நகரம் என்பது ஏழைகளுக்கும் சொந்தம் என்ற அடிப்படையில் அவர்களுக்கு நில உரிமை சட்டபூர்வமாகவே உறுதிசெய்யப்படுகிறது. ஓடிசா குடிசைவாழ் மக்கள் நில உரிமைச் சட்டம், 2017-ன் கீழ் இந்த உரிமை வழங்கப்படுகிறது.

முன்னோடித் திட்டம்

குஜராத், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நகர்ப்புறங்களில் ஓடும் ஆறுகளைத் தூய்மைப்படுத்தும் பணிக்காகவும் வேறு காரணங்களுக்காகவும் குடிசைவாசிகள் அவர்களுடைய வசிப்பிடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டு தொலை தூரங்களில் குடியமர்த்தப்பட்டதால் ஏராளமானோர் வேலை வாய்ப்பையும் வருவாயையும் இழந்தனர். அவர்களில் சிலர் புதிய இடங்களில் தந்த வீடுகளைப் பூட்டிக்கொண்டு பழைய இடங்களுக்குப் பக்கத்திலேயே வாடகைக்கோ அல்லது புதிய குடிசைகளை அமைத்துக்கொண்டே குடியேறத் தொடங்கிவிட்டனர். இது, மக்களுடைய விருப்பத்தைக் கேட்டு எடுக்கப்பட்ட முடிவல்ல என்பதையே உணர்த்துகிறது.

மு.கருணாநிதியுடன் சி.ராஜகோபாலாச்சாரியார்

1970-ல் அன்றைய முதல்வர் மு.கருணாநிதியால் குடிசை மாற்று வாரியம் தொடங்கப்பட்டது. குடிசைகளில் வசிப்போருக்கு அடுக்கங்களாக வீடுகள் கட்டித் தரப்பட்டன. இந்தத் திட்டம் குறித்து அப்போது மூத்த அரசியல் தலைவர் ராஜாஜியிடம் கருத்து கேட்கப்பட்டது. "நகரங்களுக்கு வேலை தேடி ஏழைகள் வருவது எப்போதும் நடப்பதுதான். வீடுகளைக் கட்டித் தருவதால் இனி குடிசைகளே இருக்காது என்று உத்தரவாதம் அளிக்க முடியாது. அதற்குப் பதிலாக நகரங்களுக்கு வரும் ஏழைகளுக்கு வேலையும் வருமானமும் கிடைப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். பொருளாதார நிலைமை மேம்பட்டதும் குடிசையில் இருப்பவர்கள் நல்ல வீடுகளுக்கு முதலில் வாடகைக்குக் குடிபெயர்வார்கள். மேலும் வசதி வந்ததும் சொந்தமாக வீடு வாங்கிக்கொண்டோ, வீடு கட்டிக்கொண்டோ செல்வார்கள்" என்றார் ராஜாஜி. அரசின் அரிய நிதி வளத்தை, வேலைவாய்ப்புக்குப் பயன்படுத்தினாலேயே வறுமை ஒழிந்துவிடும் என்று அவர் மறைமுகமாகத் தெரிவித்தார்.

ஆனால், சென்னை நகரில் வாழும் குடிசைவாசிகள் பலர், மறுகுடியமர்த்தல் எனும் பெயரில் வாழ்விடத்திலிருந்து வேருடன் அகற்றப்பட்டு வேற்றிடங்களுக்கு அனுப்பப்படும் போக்கு இன்றுவரை முடிவுக்கு வரவில்லை என்பது துயரம்.

இந்நிலையில், தமிழகம் மட்டுமல்லாது அனைத்து மாநிலங்களுக்கும் முன்னுதாரணமாக இந்தத் திட்டத்தைக் கொண்டுவருகிறார் நவீன் பட்நாயக்!

ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

ஒடிசாவின் 46,000 பள்ளி ஆசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைப்படி ஊதியங்களை உயர்த்தி வழங்கவும் அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது. அது மட்டுமின்றி உயர் நிலைப் பள்ளிக்கூடங்கள், உயர் தொடக்கப்பள்ளிகள், சம்ஸ்கிருத பள்ளிக்கூடங்கள், மதறஸாக்கள், அரசு அல்லாத அமைப்புகள் நடத்தும் கல்லூரிகள் ஆகியவற்றுக்கும் மானிய உதவியை அரசு தொடர்ந்து வழங்கும் என்றும் கூடுதல் செலவு 292 கோடி ரூபாயை மாநில அரசே ஏற்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

x