ஜனவரி 3: சாவித்ரிபாய் பூலே பிறந்தநாள்


இன்று பெண் கல்வி, பெண்கள் முன்னேற்றம் என இந்தியாவில் நடந்திருக்கும் பெரும் மாற்றங்களுக்கு வித்திட்டவர் ‘சாவித்ரிபா’ என அன்போடு அழைக்கப்பட்ட சாவித்ரிபாய் பூலே. மகாராஷ்டிர மாநிலம் சத்தாரா மாவட்டத்தில் உள்ள நைகாவ் கிராமத்தில் 1831 ஜனவரி 3-ல் விவசாயக் குடும்பத்தில் பிறந்தார் சாவித்ரிபாய்.

திருமணமானபோது சாவித்ரிபாயின் வயது 9. அப்போது அவர் முறைப்படி கல்வியும் கற்றிருக்கவில்லை. அவரது கணவர் ஜோதிராவ் பூலே, அவருக்குக் கல்வி கற்பித்தார். சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். இந்திய சமூகப் புரட்சியின் தந்தை என்றும், மகாத்மா என்றும் அழைக்கப்படும் ஜோதிராவின் வார்த்தைகள் சாவித்ரிபாய்க்கு உத்வேகம் தந்தன. அவர் செய்த பணிகள் இன்றளவும் போற்றப்படுகின்றன.

அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்குக் கல்வி என்பது எட்டாக்கனி. ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்களுக்கு அதெல்லாம் நினைத்தே பார்க்க முடியாத விஷயம். அந்தச் சூழலில், 1848-ல் புனேயில் பெண்களுக்கான பள்ளியைத் தொடங்கினார் சாவித்ரிபாய் பூலே. முதன்முதலாகத் திறக்கப்பட்ட பெண்கள் பள்ளி அதுதான். 1852-ல் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான பள்ளியையும் சாவித்ரிபாய் தொடங்கினார்.

ஆனால், பெண்களுக்குக் கல்வி புகட்டும் பணி அவருக்கு அத்தனை எளிதாக இருக்கவில்லை. சாதிவெறியில் ஊறிப்போன ஊர் மக்கள் செய்த இடையூறுகள் ஏராளம். பள்ளி செல்லும் வழியில் அவர் மீது கற்களை எறிவதில் தொடங்கி, மனித மலத்தை வீசுவதுவரை கயமையின் உச்சத்தை அவர்கள் காட்டினர். இதனால், ஒவ்வொரு நாளும் மாற்றுப் புடவையுடன் தான் அவர் பள்ளிக்குப் புறப்படுவார்.

தம்பதியினர் இருவரும் இணைந்து ஏராளமான சமூகப் பணிகளைச் செய்தனர். பொது நீர்நிலைகளில் தண்ணீர் எடுக்க அனுமதி மறுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக, தங்கள் சொந்த வீட்டிலேயே கிணறு வெட்டினர் அந்தத் தம்பதியினர். 1890-ல் ஜோதிராவ் பூலே மறைந்த பின்னர் அவர் நடத்திவந்த ‘சத்ய ஷோதக் சமாஜ்’ (உண்மையைத் தேடுபவர்களின் சங்கம்) எனும் அமைப்பைத் தானே முன்னெடுத்து நடத்தினார்.

பெண்களுக்குக் கல்வி புகட்டியதுடன், விதவைகள் மறுவாழ்விலும் புரட்சி செய்தார். கர்ப்பிணியாக இருந்த காசிபாய் எனும் விதவை தற்கொலைக்கு முயன்றபோது அவரைக் காப்பாற்றி அடைக்கலம் தந்தனர் சாவித்ரிபாய் - ஜோதிராவ் தம்பதியினர். காசிபாய்க்குப் பிறந்த மகன் யஷ்வந்தைத் தங்கள் மகனாகவே வளர்த்தனர். யஷ்வந்த் நன்கு படித்து மருத்துவரானார்.

1897-ல் நாலாசோபோரா பகுதியில் ப்ளேக் நோய் பரவிய காலத்தில், புணேயின் புறநகர்ப்பகுதியான் ஹடப்ஸரில் ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். அங்கு ஏராளமானோருக்குச் சிகிச்சையளிக்கும் பணியில் சாவித்ரிபாயும் பங்கேற்றார். அந்தப் பணியில் அவருக்கும் ப்ளேக் நோய் தொற்றிக்கொண்டது. 1897 மார்ச் 10-ல் அவர் மரணமடைந்தார்.

சிறந்த கவிஞராகவும் விளங்கிய அவர், ‘காப்யா பூலே’ எனும் கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். சாதிய அடக்குமுறைகள், கல்வியின் அவசியம், இயற்கையின் அழகு உள்ளிட்ட விஷயங்களை அதில் பதிவுசெய்திருந்தார்.

x