15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்குத் தடுப்பூசி: இந்தியா முழுவதும் இன்று தொடக்கம்!


ஜனவரி 3 முதல் 15-18 வயதினருக்குத் தடுப்பூசி செலுத்தப்படும் என, டிசம்பர் 25-ல் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். அதன்படி 15 முதல் 18 வயதுக்குட்பட்டோருக்கான கரோனா தடுப்பூசிகள் இன்று முதல் செலுத்தப்படுகின்றன. 2007-க்கு முன்பு பிறந்தவர்கள் இந்தத் தடுப்பூசி செலுத்திக்கொள்ளத் தகுதியானவர்கள் ஆவர்.

இவர்களுக்குக் கோவாக்ஸின் தடுப்பூசி மட்டுமே செலுத்தப்படும் என மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருந்தது.

புத்தாண்டு அன்று இதற்காகப் பதிவுசெய்துகொள்ள அரசு அறிவுறுத்தியிருந்தது. இதையடுத்து இதுவரை இந்த வயதைச் சேர்ந்த 7.65 லட்சம் பேர் கோவின் (https://www.cowin.gov.in) தளத்தில் பதிவுசெய்திருக்கின்றனர்.

பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டுவிட்ட நிலையில், மாணவர்களிடையே கரோனா தொற்று பரவிவந்தது. ஹாஸ்டல்களில் தங்கியிருக்கும் மாணவர்களுக்குக் கரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில், பதின்பருவத்தினருக்குத் தடுப்பூசி செலுத்தப்படுவது முக்கியத்துவம் பெறுகிறது.

மருத்துவமனைகளிலும், சுகாதார மையங்களிலும் இந்தத் தடுப்பூசிகள் செலுத்தப்படும். அத்துடன் பள்ளிகளிலும், பிற கல்வி நிறுவனங்களிலும் இதற்கான மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

தமிழகத்தில் பதின்பருவத்தினருக்குத் தடுப்பூசி போடும் திட்டத்தை, சென்னை போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைக்கிறார்.

தமிழகம் முழுவதும் பதின்பருவத்தினருக்கான தடுப்பூசிகள் செலுத்துவதற்காக, உரிய பணிகளை மேற்கொள்ளுமாறு பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

சுகாதாரத் துறையினரே நேரடியாக வந்து தடுப்பூசிகளைச் செலுத்தவிருக்கின்றனர். இதன்படி 10,11 மற்றும் 12-ம் வகுப்பு படிக்கும் 33 லட்சம் மாணவர்களுக்கும் இன்ற் முதல் தடுப்பூசி செலுத்தப்படவிருக்கிறது.

தமிழகத்தில், நேற்று (ஜன.2) 50,000 மையங்களில் 17-வது தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டன. இன்றைய தேதியில் தமிழகத்தில் 84.8 சதவீதம் பேருக்கு முதல் தவணை தடுப்பூசியும், 55.8 சதவீதம் பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் போடப்பட்டிருக்கின்றன.

ஜனவரி 10 முதல் பூஸ்டர் டோஸ்

ஐரோப்பிய நாடுகளிலும் அமெரிக்காவிலும் டெல்டா வைரஸைவிட வேகமாக ஒமைக்ரான் பரவிவந்த நிலையில், இந்தியாவிலும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்தது. இதைத் தொடர்ந்து, அந்நாடுகளைப்போலவே இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ்கள் போடப்பட வேண்டும் எனும் குரல்கள் எழுந்தன.

இதுகுறித்து தொடர்ந்து ஆலோசனைகள் நடந்துவந்த நிலையில், இந்தியாவிலும் பூஸ்டர் டோஸ் செலுத்த முடிவெடுக்கப்பட்டது.

சுகாதாரத் துறை ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கும், 60 வயது மேற்பட்டோருக்கும் பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் ஜனவரி 10 முதல் தொடங்குகின்றன.

புதிய தடுப்பூசிகள்

கோர்பேவாக்ஸ், கோவோவாக்ஸ் ஆகிய இரண்டு புதிய தடுப்பூசிகளும் அறிமுகப்படுத்தப்படவிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

x