கரோனா தடுப்பூசிக்கு 3.5 லட்சம் சிறார் முன்பதிவு: காலை நிலவரம்


சிறாருக்கான கரோனா தடுப்பூசி பணிகள் நாளை(ஜன.3) தொடங்கவுள்ள நிலையில், இன்று காலை நிலவரப்படி தடுப்பூசிக்காக சுமார் 3.5 லட்சம் சிறார் முன்பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் டெல்டா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருவதன் மத்தியில், 15-18 வயதுடைய சிறாருக்கான தடுப்பூசி போடும் பணிகள் நாளை தொடங்க உள்ளன. தமிழகத்தில் இதற்கான முகாம்களை, சென்னை போரூர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்க உள்ளார்.

இந்த சிறார் தடுப்பூசியின் முழுமையான இலக்கை அடையும் பொருட்டு, பள்ளிகள் வாயிலாகவும் 15-18 வயதில் தகுதியுடையோர் தரவுகள் சேகரிக்கபட்டு வருகின்றன. மேலும் பள்ளிக்கு வெளியே உள்ள இந்த வயதினரை அடையாளம் காணும் வகையில் இடைநின்றோர் உள்ளிட்ட தகவல்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

மேலும் சிறார் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யும் பணிகள் நேற்று தொடங்கின. ’கோவின்’ இணையதளத்தில் நேரடியாக ஆன்லைன் பதிவு மேற்கொள்ளலாம். அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி சுமார் மூன்றரை லட்சம் சிறார் கரோனா தடுப்பூசிக்காக முன்பதிவு செய்துள்ளனர்.

கடந்த வாரம் பிரதமர் மோடி அறிவித்ததன் அடிப்படையில், ஜன.3 அன்று 15-18 வயது சிறாருக்கு கரோனா தடுப்பூசியும், ஜன.10 அன்று 60+ வயதினரில் இணைநோயர்களுக்கான பூஸ்டர் டோஸ் பணிகளும் தொடங்கி நடைபெற உள்ளன. சிறாருக்கான கரோனா தடுப்பூசியாக கோவாக்ஸின் அளிக்கப்பட உள்ளது.

x