பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிடில் ரூ.1,000 அபராதம்: தெலங்கானா அதிரடி!


தெலங்கானா மாநிலத்தில் அதிகரிக்கும் கரோனா தொற்றுப் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தெலங்கானாவில் நேற்று(ஜன.1) ஒரு நாளில் மட்டும் 317 நபர்கள் புதிதாக கரோனா தொற்றுக்கு ஆளாகி இருகிறார்கள். இதன் மூலம் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 3733ஆக அம்மாநிலத்தில் அதிகரித்துள்ளது. மேலும் 12 புதிய ஒமைக்ரான் தொற்றாளர்களுடன், தெலங்கானாவில் ஒமைக்ரான் பாதிப்புக்கு ஆளானோர் எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ளது. அதிகரிக்கும் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் தெலங்கானா அரசு பல புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதன்படி பொது இடங்களில் முகக்கவசம் இன்றி நடமாடுவோருக்கு ரூ.1000 அபதராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தனி நபர் இடைவெளியை கடைபிடிக்கவும், பொதுமக்கள் புழங்கும் வர்த்தக மையங்களில் சானிடைசர் பயன்பாட்டுக்கு வைத்திருக்குமாறும், குறிப்பிட்ட இடைவெளியில் கிருமிநாசினி கொண்டு வளாகத்தை தூய்மை செய்யவும், இதர கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக பின்பற்றுமாறும் உத்தரவிடபட்டுள்ளது. மேலும் பிரவேசிப்பவரின் உடல் வெப்பநிலையை அளவிட்ட பின்னரே அவரை அனுமதிப்பது குறித்து முடிவெடுக்கவும் உத்தரவாகியுள்ளது.

அரசியல், கலாச்சாரம், மதம் சார்ந்த பொதுக்கூட்டங்கள், பேரணிகள் மற்றும் அனைத்து பொது நிகழ்ச்சிகளுக்கும் அங்கே தடை விதிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் ஜன.10 வரை அமலில் இருக்கும் என்றும், அதன் பின்னரும் அவற்றை நீட்டிப்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய கரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்குமாறு மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்களுக்கு மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

சர்வதேசளவிலும், தேசிய அளவிலும் திடீரென அதிகரித்து வரும் தொற்றாளர்களின் எண்ணிக்கை, ஒமைக்ரான் பரவலின் வீரியம் ஆகியவற்றை அடுத்து, தெலங்கானா அரசு இந்த புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

x