மக்களவை தேர்தல் பணியில் 1000 மணி நேரம் பறந்து விமானப் படை சேவை


புதுடெல்லி: மக்களவை தேர்தல் பணியில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் 1,750 முறை பயணம் மேற்கொண்டு 1,000 மணி நேரத்துக்கு மேல் பறந்துள்ளன.

இது குறித்து விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மக்களவை தேர்தல் ஏப்ரல் 19-ம் தேதி முதல் ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் பணியில் விமானப்படையின் எம்.ஐ, சேத்தக் மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துருவ் இலக ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. இதன் மூலம் ஜம்மு காஷ்மீரில் இருந்து தமிழகம் வரையும், குஜராத்திலிருந்து நாகாலாந்து வரையும் உள்ள தொலைதூர பகுதிகளுக்கும், பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ள பகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு இயந்திரங்களையும், தேர்தல் பணியாளர்களையும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் பாதுகாப்பாக கொண்டு சென்று, தேர்தல் முடிந்ததும் அவர்களை மீண்டும் அழைத்து வந்தன.

மொத்தம் 1,750 முறை விமானப்படை ஹெலிகாப்டர்கள் பயணம் மேற்கொண்டு 1,000 மணி நேரத்துக்கு மேல் பறந்துள்ளன. தேர்தல் ஆணையம் மற்றும் மாநில அதிகாரிகள் ஒத்துழைப்புடன் இந்த மிகப் பெரிய பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

அமைதி பணிகள்: இது தவிர இந்திய ராணுவம்மற்றும் எல்லை பாதுகாப்பு படையின் ஹெலிகாப்டர்களும் தேர்தல் பணிக்கு பயன்படுத்தப்பட்டன. போர் நேரங்களில் மட்டும் அல்லாது அமைதிப் பணிகளிலும் விமானப்படை ஹெலிகாப்டர்கள் முக்கிய பங்காற்றுகின்றன. மக்களுக்கு உதவுவதில் விமானப்படை முன்னணியில் உள்ளது.

இவ்வாறு விமானப்படை தெரிவித்துள்ளது.

x