காஷ்மீரில் குப்கார் கூட்டணித் தலைவர்கள் கைது


குப்கார் கூட்டணித் தலைவர்கள்

ஜம்முவுக்கு 6, காஷ்மீருக்கு 1 எனக் கூடுதல் சட்டப்பேரவைத் தொகுதிகளை ஏற்படுத்த, தொகுதி மறுவரையறை ஆணையம் பரிந்துரைத்ததை எதிர்த்து காஷ்மீரின் குப்கார் அரசியல் கூட்டணி இன்று (ஜன.1) போராட்டம் நடத்துவதாகக் அறிவித்திருந்த நிலையில் அந்தக் கூட்டணியைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டக்கூறு ரத்து செய்யப்படுவதாக, 2019 ஆகஸ்ட் 5-ல் நாடாளுமன்றத்தில் மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்தார். ஜம்மு - காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகக் காஷ்மீர் பிரிக்கப்பட்டது. இந்தச் சூழலில், ஜம்மு - காஷ்மீர் தொகுதி மறுவரையறை ஆணையத்தை, 2020 மார்ச் 6-ல் மத்திய அரசு அமைத்தது.

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா தேசாய் தலைமையிலான இந்த ஆணையத்தில் தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி-க்களான ஃபரூக் அப்துல்லா, முகமது அக்பர் லோன், ஹஸ்னைன் மஸூதி ஆகியோருடன், ஜம்மு பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட பாஜகவைச் சேர்ந்த ஜிதேந்திர சிங், ஜுகல் கிஷோர் சர்மா ஆகிய இருவர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

மறுவரையறை ஆணையம் பரிந்துரை டிசம்பர் 20-ல் வெளியானது.

இது நடைமுறைக்கு வந்தால், சட்டப்பேரவையில் ஜம்மு பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 37-லிருந்து 43 ஆகும். காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 46-லிருந்து 47 ஆக மட்டுமே உயரும். முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த ஒருவரை முதல்வராக்கும் சூழல் உருவாகும் எனக் கருதப்படுகிறது.

காஷ்மீர் அரசியல் கட்சிகள் இந்தப் பரிந்துரையைக் கடுமையாக எதிர்க்கின்றன.

தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி, மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகிக்கும் குப்கார் அரசியல் கூட்டணி, ஜனவரி 1-ல் ஸ்ரீநகரில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

இந்நிலையில், அக்கூட்டணியைச் சேர்ந்த தலைவர்கள் இன்று கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர்.

இதையடுத்து, “காலை வணக்கம். 2022-ம் ஆண்டுக்கு நல்வரவு. சட்டவிரோதமாக மக்களை அடைத்துவைக்கும் அதே காஷ்மீர் போலீஸார் மற்றும் சாதாரண ஜனநாயக நடவடிக்கையைக் கண்டு அஞ்சும் அரசு நிர்வாகத்துடன் ஒரு புதிய ஆண்டு தொடங்குகிறது” என்று ட்வீட் செய்திருக்கிறார் தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் உமர் அப்துல்லா.

உமர் அப்துல்லா

“குப்கார் கூட்டணி அமைதிப் போராட்டத்தை முறியடிக்க, கூட்டம் நடத்திவிருந்த இடத்துக்கு வெளியே ட்ரக்குகள் நிறுத்தப்பட்டிருக்கின்றன. சில விஷயங்கள் மாறுவதே இல்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார். தனது வீட்டுக்கு அருகில் காவல் துறை ட்ரக் நிறுத்தப்பட்டிருப்பதாக, காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவருமான மெஹ்பூபா முஃப்தியும் கூறியிருக்கிறார்.

தனது தந்தையும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லாவின் வீட்டுக்கும், தனது சகோதரியின் வீட்டுக்கும் இடையிலான வாயிலையும் போலீஸார் பூட்டியிருப்பதாகக் கண்டனம் தெரிவித்திருக்கும் உமர் அப்துல்லா, “இத்தனைக்குப் பின்னரும் நமது தலைவர்கள், இந்தியா மிகப் பெரிய ஜனநாயக நாடு என சொல்லிக்கொள்கிறார்கள்” எனக் காட்டமாக விமர்சித்திருக்கிறார்.

அமைதிப் போராட்டத்துக்குக்கூட அனுமதி வழங்காத அளவுக்கு காஷ்மீர் நிர்வாகம் பயந்துபோயிருப்பதாக குப்கார் கூட்டணியின் செய்தித் தொடர்பாளரும் மார்க்சிஸ்ட் கட்சி மூத்த தலைவருமான முகமது யூசுப் தாரிகாமி கூறியிருக்கிறார்.

சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ததை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கும் நிலையில், மறுவரையறைப் பணிகள் கூடாது என மறுவரையறை ஆணையத்திடமே எதிர்ப்பு தெரிவித்திருந்தது தேசிய மாநாட்டுக் கட்சி. இப்போது ஆணையத்தின் பரிந்துரையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாகவும் கூறியது குறிப்பிடத்தக்கது.

x