உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா கலை: நார்வே தூதர் மே-எலின் ஸ்டெனர் புகழாரம்


யோகா பயிற்சியில் ஈடுபட்டுள்ள இந்தியாவுக்கான நார்வே தூதர் மே-எலின் ஸ்டெனர்.

புதுடெல்லி: உலகுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடையாக யோகா கலை உள்ளது என்று இந்தியாவுக்கான நார்வே தூதர் மே-எலின் ஸ்டெனர் புகழாரம் சூட்டியுள்ளார்.

யோகாவின் முக்கியத்துவத்தை அறிந்துகொள்ளும் வகையில் சர்வதேச யோகா தினம் ஆண்டுதோறும் ஜூன் 21-ம் தேதி கடைபிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் உலக நாடுகளுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடையாகவும், பரிசாகவும் யோகா கலை உள்ளது என்று இந்தியாவுக்கான நார்வே நாட்டின் தூதர் மே-எலின் ஸ்டெனர் பாராட்டு தெரிவித்துள்ளார். 10-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி பிரதமர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்தைச் சுட்டிக் காட்டி தூதர் மே-எலின் ஸ்டெனர் புகழாரம் சூட்டியுள்ளார்.

இதுதொடர்பாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது: உலகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்களை யோகா இணைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது நூற்றுக்கு நூறு உண்மை. உலக நாடுகளுக்கு இந்தியா அளித்த மிகப்பெரிய பரிசாக யோகா கலை உள்ளது.

நானும் தற்போது யோகா கலையைக் கற்று அதில் நிபுணத்துவம் பெற்று வருகிறேன். அனைவரும் இந்தக் கலையைப் பயின்று பயன் அடையவேண்டும்.

இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் யோகா செய்யும்புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது பக்கத்தில் இந்தியாவுக்கான நார்வே தூதர் மே-எலின் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2023-ம் ஆண்டில் பிரதமர் மோடி, நியூயார்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் சிறப்பு யோகா பயிற்சியை முன்னின்று நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

x