ரேஷன்தாரர்களுக்கு மாதம் ரூ.250 பெட்ரோல் மானியம்: ஜார்க்கண்ட் அதிரடி!


ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் பயன்பெறும் வகையில், பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.25 மானியம் தரும் அறிவிப்பை, மாநில முதல்வர்ஹேமந்த் சோரன் அறிவித்துள்ளார்.

ஹேமந்த் சோரனின் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி அரசு, ஜார்க்கண்டில் பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடையும் விழா இன்று(டிச.29) நடைபெற்றது. அதையொட்டி மக்களுக்கான நலத்திட்ட அறிவிப்புகளில் ஒன்றாக ஹேமந்த் சோரன் இதனை அறிவித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “பெட்ரோல் விலை வானுயர்ந்து விட்டது. இதனால் ஏழைகள் மற்றும் மத்திய வர்க்கத்தினர் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். ஒரு விவசாயி தினசரி சந்தைக்குச் சென்று தனது விளைபொருளை விற்றுத்திரும்ப தடுமாற வேண்டியதாகிறது. இருசக்கர வாகனம் வைத்திருக்கும் ஏனைய நடுத்தர மக்களுக்கும் பெட்ரோல் விலை உயர்வு கட்டுப்படியாகவில்லை. எனவே, மாநிலத்தின் குடும்ப அட்டைதாரர்களுக்கு பெட்ரோல் விலையில் லிட்டருக்கு ரூ.25 என மாதம் 10 லிட்டருக்கு மானியம் வழங்கப்படும்” என அறிவித்தார்.

குடியரசு தினம்(ஜன.26) முதல் இந்த புதிய ஏற்பாடு ஜார்க்கண்டில் அமலுக்கு வருகிறது. மானியத் தொகையை நேரடியாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் சேரும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜார்க்கண்டின் இந்த அதிரடி அறிவிப்பு, 5 மாநில தேர்தலில் மும்முரமாக இருக்கும் பாஜகவுக்கு சங்கடமளிக்கக் கூடும். சர்வதேசச் சந்தையில் விலை குறைந்தபிறகும் இந்தியாவில் பெட்ரோலிய பொருட்கள் விலை குறைப்பின்றி தொடர்கின்றன. இதன் காரணமாக சுமார் 2 மாதங்களாக விலையில் மாற்றமின்றி அவை தொடர்கின்றன.

x