போலீஸாரிடம் சகஜமாகச் சிரித்துப் பேசிய ஹரித்வார் சர்ச்சைப் பேச்சுத் துறவிகள்!


உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில், டிசம்பர் 17 முதல் 20 வரை ‘தரம் சன்ஸத்’ (மத நாடாளுமன்றம்) எனும் பெயரில் இந்து மதத் துறவிகள் கலந்துகொண்ட மாநாடு நடைபெற்றது. அதில் இந்து அமைப்புகளைச் சேர்ந்த பல்வேறு துறவிகள் கலந்துகொண்டனர்.

அந்நிகழ்ச்சியில் பேசிய பலர் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்புப் பேச்சுகளைப் பேசியதுடன், இனப்படுகொலை செய்வது குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

ஜிதேந்திர நாராயண் சிங் தியாகி (என்கிற) வசீம் ரிஸ்வி மீது மட்டும்தான் முதலில், இந்திய தண்டனைச் சட்டம் 153ஏ பிரிவின்கீழ் வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் ஷியா வக்பு வாரியத்தின் தலைவராக இருந்த இவர், 2021 டிச.6-ல்தான் இந்துவாக மதம் மாறினார்.

பிறர் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது. யாரும் புகார் பதிவுசெய்யவில்லை என்பதையே அதற்கு காரணமாகச் சொல்லிவந்தார், ஹரித்வார் போலீஸ் எஸ்பி சிட்டி சேகர் சுயால்.

இதற்கிடையே, தரம் தாஸ், பெண் துறவி அன்னபூர்ணா ஆகியோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டதாக, டிச.23-ல் அவர் தெரிவித்திருந்தார். அதற்குப் பின்னரும் இதுவரை கைது நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

வெறுப்புப் பேச்சுக்கள் அடங்கிய காணொலிகள் அதிகம் பரவுவதைத் தடுப்பதுதான், போலீஸாரின் முக்கிய நோக்கம் எனத் தெரிகிறது.

அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற துறவி ஆனந்த் ஸ்வரூப், “எங்கள் கருத்துகளில் நாங்கள் உறுதியாக நிற்கிறோம். எங்கள் சகோதரிகளை ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்தால் அவரை ஏன் நாங்கள் கொல்லக் கூடாது? அப்படியான நபர்களைப் பற்றித்தான் இக்கூட்டத்தில் பேசியவர்கள் குறிப்பிட்டார்கள். எங்கள் நண்பர்களான சாமானிய முஸ்லிம்களைப் பற்றி அல்ல. இந்தியா ஒரு இந்து ராஷ்டிரமாக உருவாவதை யாராலும் தடுக்க முடியாது” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், ஜிதேந்திர நாராயண் சிங் தியாகிக்கும், அன்னபூர்ணாவுக்கும் உத்தராகண்ட் மாநிலப் போலீஸார் இன்று (டிச.29) நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். தரம் தாஸுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இம்மாநாட்டை நடத்திய பிரதானக் குழுவின் உறுப்பினர்கள், ஒரு முஸ்லிம் மதகுரு (மவுலானா) தங்களுக்கு எதிராகச் சதித் திட்டம் தீட்டுவதாகக் கூறி அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யுமாறு நேற்று (டிச.28) ஹரித்வார் கோட்வாலி காவல் நிலையத்துக்குச் சென்று புகார் பதிவுசெய்தனர். எனினும், அதில் யார் பெயரையும் அவர்கள் குறிப்பிடவில்லை.

தரம் சன்ஸத் மாநாட்டில் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பெண் துறவி அன்னபூர்ணா உள்ளிட்டோர், போலீஸாரைச் சந்தித்து இந்தப் புகார் கடிதத்தைக் கொடுத்தனர்.

விசாரணை செல்லும் விதத்தைப் பொறுத்து, இந்துத் துறவிகள் அளித்த புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்படுவது குறித்து தீர்மானிக்கப்படும் எனப் போலீஸார் தெரிவித்திருக்கின்றனர்.

அதேவேளையில், புகார் கொடுக்கச் சென்ற துறவிகள், நிலையக் காவல் அதிகாரியான (எஸ்.எச்.ஓ) ராகேந்தர் சிங் கதாய்ட்டுடன் சகஜமாகச் சிரித்துப் பேசியதும், ஒரு துறவி, “போலீஸார் நம் பக்கம்தான் நிற்பார்கள்” என்று கூறியதும் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

x