துப்பாக்கிச்சூடு சம்பவம்: ராணுவத்தினரிடம் விசாரணை நடத்தும் நாகாலாந்து சிறப்புப் புலனாய்வுக் குழு


நாகாலாந்தில், கிளர்ச்சியாளர்கள் எனத் தவறாகக் கருதி, 14 பேரைச் சுட்டுக் கொன்ற ‘21 பாரா சிறப்புப் படை’ வீரர்கள் மீது விசாரணை நடத்த அம்மாநிலத்தைச் சேர்ந்த புலனாய்வுக் குழுவுக்கு ராணுவம் அனுமதி வழங்கியிருக்கிறது.

டிசம்பர் 4-ல் நாகாலாந்தின் மோன் மாவட்டத்தின் ஓட்டிங் அருகே கிளர்ச்சியாளர்களின் நடமாட்டம் இருப்பதாகக் கிடைத்த தகவலையடுத்து அங்கு விரைந்த பாதுகாப்புப் படையினர், அங்கு வாகனத்தில் வந்துகொண்டிருந்த சுரங்கத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 6 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். செய்தியறிந்து வெகுண்டெழுந்த உள்ளூர் மக்கள் ராணுவத்தினரைச் சுற்றிவளைத்துத் தாக்கியதில் ஒரு ராணுவ வீரர் உயிரிழந்தார். அப்போது ராணுவத்தினர் தற்காப்புக்காக நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர்.

ஏற்கெனவே, ராணுவத்தைச் சேர்ந்த சிறப்புக் குழு இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்திவரும் நிலையில், மாநில அளவில் இதை விசாரிக்கவிருக்கிறது நாகாலாந்து சிறப்புப் புலனாய்வுக் குழு.

8 அதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழு தற்போது 22 பேரைக் கொண்டதாக விரிவுபடுத்தப்படுகிறது. இதில் 5 ஐபிஎஸ் அதிகாரிகளும் இடம்பெறுகிறார்கள். 7 அணிகளாகப் பிரிந்து இக்குழு விசாரணை மேற்கொள்ளும்.

இந்த வாரத்திலேயே, 21 பாரா சிறப்புப் படை வீரர்களின் வாக்குமூலங்களைப் பதிவுசெய்யும் பணியை இக்குழு தொடங்கவிருக்கிறது.

நாகாலாந்தில் தற்போது ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரங்கள் சட்டம் (ஆஃப்ஸ்பா) அமலில் இருக்கிறது. இந்தச் சட்டம் அமலில் இருக்கும் பகுதிகளில் ராணுவத்தினர் எடுக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து நீதிமன்றங்களில் வழக்கு தொடர முடியாது. மனித உரிமைகள், அடிப்படை உரிமைகள் என்று அரசியல் சட்டம் அளிக்கும் உரிமைகளை இப்பகுதிகளில் வசிப்பவர்கள் கோர முடியாது.

ஆயுதமாகப் பயன்படுத்தும் வாய்ப்புள்ள எந்தப் பொருளை ஒருவர் கொண்டுவந்தாலும் அவரைச் சுட்டுக்கொல்ல ராணுவத்தினருக்கு அதிகாரம் அளிக்கும் அளவுக்கு இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டது. இதற்கு முன்னர் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்ற பாதுகாப்புப் படையினர் யாரும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில்லை.

இந்நிலையில், மாநில அரசின் சிறப்புப் புலனாய்வுக் குழு ராணுவத்தினரிடம் விசாரணை நடத்துவது நடைமுறைச் சாத்தியம் கொண்டதா எனும் கேள்விகளும் எழுந்திருக்கின்றன.

நாகாலாந்து மட்டுமல்லாமல், மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள் ஆஃப்ஸ்பா சட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிவருகின்றன. டிசம்பர் 23-ல் உள் துறை அமைச்சர் அமித் ஷாவுடன் வட கிழக்கு மாநில முதல்வர்களின் பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நாகாலாந்து முதல்வர் நெபியூ ரியோ, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, நாகாலாந்து துணை முதல்வர் யாந்துங்கோ பேட்டன் போன்றோர் கலந்துகொண்டனர். ஆஃப்ஸ்பா சட்டத்தைத் திரும்பப் பெறுவது தொடர்பான ஆய்வை நடத்த ஒரு குழுவை அமைப்பது என அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

மணிப்பூரில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், தேர்தல் களத்தில் இந்தக் கோரிக்கை முக்கிய அம்சமாக உருவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

x