லூதியானா குண்டுவெடிப்பு: ஜெர்மனியில் கைதான ஜஸ்விந்தர் சிங் முல்தானி யார்?


பஞ்சாப் மாநிலத்தின் லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில், டிச.23-ல் நடந்த குண்டுவெடிப்பின் மூளையாகச் செயல்பட்டவர் என ஜஸ்விந்தர் சிங் முல்தானி எனும் நபர் ஜெர்மனியில் நேற்று கைதுசெய்யப்பட்டார்.

நீதிமன்றக் கட்டிடத்தின் 2-வது தளத்தில் நடந்த அந்தக் குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள். உயிரிழந்த நபர்தான் தற்கொலை குண்டுவெடிப்பில் ஈடுபட்டவர் எனப் பின்னர் வெளியான தகவல்கள் தெரிவித்தன. ககன் ஜீப் எனும் அந்த நபர் பஞ்சாப் மாநிலம், கன்னா பகுதியைச் சேர்ந்தவர். காவல் துறையில் பணியாற்றி, பணிநீக்கம் செய்யப்பட்டவர்.

அந்தச் சம்பவத்தில் காலிஸ்தானி இயக்கத்துக்குத் தொடர்பு இருக்கலாம் எனச் சந்தேகம் எழுந்தது. தேசியப் புலனாய்வு முகமை தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், ஜெர்மனி போலீஸார் அவரைக் கைதுசெய்தனர்.

ஜஸ்விந்தர் சிங் முல்தானி (45), ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர். இந்தியாவில் தடைசெய்யப்பட்டிருக்கும் ‘சீக் ஃபார் ஜஸ்டிஸ்’ எனும் அமைப்பின் நிறுவனர் குர்பத்வன் சிங் பன்னூனுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர் எனக் கருதப்படுகிறார். அந்த அமைப்பில் அங்கம் வகிப்பவர்கூட.

பாகிஸ்தானிலிருந்து வெடிகுண்டுகளைக் கடத்தி, பஞ்சாப், டெல்லி மற்றும் மும்பையில் குண்டுவெடிப்பு நடத்தும் சதிவேலைகளை ஒருங்கிணைத்தவர் என்றும் பஞ்சாப் காவல் துறையினருக்குக் கிடைத்த உளவுத் தகவல்கள் சொல்கின்றன. சமீபகாலங்களில், ஃபெரோஸ்பூர், அமிர்தசரஸ், தரன் தாரன் ஆகிய மாவட்டங்களில் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி - ஹரியாணா எல்லையில் உள்ள சிங்கு பகுதியில் விவசாயிகள் போராட்டம் நடத்திவந்த சமயத்தில், விவசாய சங்கத் தலைவர்களில் ஒருவரான பல்பீர் சிங் ராஜேவாலைக் கொல்லவும் சதித்திட்டம் தீட்டியவர் ஜஸ்விந்தர் சிங் முல்தானி.

அந்தக் கொலை முயற்சியில் ஈடுபட்ட ஜீவன் சிங்கிடம் நடத்திய விசாரணையில் இந்தத் தகவல் தெரியவந்தது. ஜெர்மனியில் வசித்துவரும் ஜஸ்விந்தர் சிங் முல்தானியுடன் போனில் அடிக்கடிப் பேசிவந்த ஜீவன் சிங், கடும் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் மகாராஷ்டிரத்தில் கைதுசெய்யப்பட்டார்.

அடுத்தகட்டமாக, ஜஸ்விந்தர் சிங் முல்தானியை இந்தியாவுக்குக் கொண்டுவருவதற்கான முயற்சிகளும் எடுக்கப்படுகின்றன.

x