புத்தாண்டு நெருங்கும் நேரத்தில் அதிகரிக்கும் புதிய தொற்றுகள்!


இந்தியாவில் புதிதாக 6,358 பேருக்குக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. இதையடுத்து பெருந்தொற்றால் மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 75,456 ஆக அதிகரித்திருக்கிறது. ஒமைக்ரான் தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 653 ஆக உயர்ந்திருக்கிறது. அவர்களில் 186 பேர் நலம்பெற்றிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்திருக்கிறது.

பெரு நகரங்களில் கரோனா தொற்றுகளின் எண்ணிக்கை ஒரே நாளில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. மும்பையில் 70 சதவீதம், டெல்லியில் 50 சதவீதம் தொற்று உயர்ந்திருக்கிறது. மும்பையில் 24 மணி நேரத்தில் 1,377 பேருக்கும் டெல்லியில் 496 பேருக்கும் புதிதாகத் தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. இரு நகரங்களிலும் தலா ஒருவர் கரோனா தொற்றுக்குப் பலியாகியிருக்கிறார்.

டெல்லி, கர்நாடகம், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், அசாம், ஹரியாணா போன்ற மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கிறது.

கேரளத்தில் நாளை (டிச.30) முதல் ஜனவரி 2 வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும். டிச.31 இரவு 10 மணிக்குப் பிறகு புத்தாண்டுக் கொண்டாட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது.

டிச.15 முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருக்கும் புதுச்சேரியில், டிச.30 மற்றும் டிச.31, ஜனவரி 1 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 2 மணி வரை ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்காக டிச.24-25 தேதிகளில் அங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

கொண்டாட்டங்களுக்குப் பெயர் பெற்ற கோவாவில் இதுவரை, இரவுநேர ஊரடங்கு குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தொற்றுகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தால் அதுகுறித்து முடிவெடுக்கப்படும் எனத் தெரிகிறது.

பெருந்தொற்று மீண்டும் அதிகமாகப் பரவிவரும் சூழலில், நம்பிக்கையூட்டும் சில செய்திகளும் கிடைக்கின்றன. தெலங்கானாவில் முதல் தவணை தடுப்பூசிகள் 100 சதவீதம் போடப்பட்டிருப்பதாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் டி.ஹரிஷ் ராவ் அறிவித்திருக்கிறார்.

x