பாஜகவில் ஐக்கியமான தினேஷ் மோங்கியா!


அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்கும் பஞ்சாபில். அடுத்தடுத்து அரசியல் காட்சிகள் பரபரப்பாக அரங்கேறிவருகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் தினேஷ் மோங்கியா உள்ளிட்டோர், இன்று பஞ்சாப் மாநில பாஜகவில் இணைந்திருக்கிறார்கள்.

2001 முதல் இந்திய அணியில் விளையாடிவந்த தினேஷ் மோங்கியா, அதிரடி ஆட்டக்காரராகவும், திறன்வாய்ந்த சுழல்பந்து வீச்சாளராகவும் பெயர் பெற்றவர். சண்டிகரைச் சேர்ந்த தினேஷ் மோங்கியா, 1995 முதல் பஞ்சாப் அணிக்காக விளையாடத் தொடங்கி தன் திறமை மூலம் இந்திய அணியில் இடம்பெற்றவர். 2001-ல் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடந்த போட்டிதான், சர்வதேசக் கிரிக்கெட்டில் அவரது முதல் களம். அதில் பெரிதாகச் சோபிக்காத அவர், இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில், 71 பந்துகளுக்கு 77 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார். 2002-ல் குவாஹாத்தியில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில், 159 ரன்கள் எடுத்தது அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் முக்கியமான தருணம். 2004-ல் லங்காஷையர் அணிக்காக விளையாடியதன் மூலம், டி-20 கிரிக்கெட்டில் விளையாடிய முதல் இந்தியர் எனும் பெருமையும் அவருக்கு உண்டு.

2007-ல் ஜீ என்டெர்டெயின்மென்ட் என்டர்பிரைசஸ் தொடங்கிய இந்திய கிரிக்கெட் லீக் போட்டிகள் கிரிக்கெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), அதை அங்கீகரிக்கவில்லை. அவற்றைப் பொறுப்பேற்று நடத்திய கபில் தேவ், தேசிய கிரிக்கெட் அகாடமியிலிருந்து நீக்கப்பட்டார். அந்தப் போட்டிகளில் விளையாடிய கிரிக்கெட் வீரர்களும் புறக்கணிக்கப்பட்டனர். அதில் விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் பிசிசிஐ தடைவிதித்தது. அவர்களில் தினேஷ் மோங்கியாவும் ஒருவர்.

2008-ல் பிசிசிஐ சார்பில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய பின்னர், நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தன. பிற்காலத்தில் பலர் மீதான தடை விலக்கப்பட்டு இந்திய அணியிலும் ஐபிஎல் அணிகளிலும் இடம் கிடைத்தது. எனினும், தினேஷ் மோங்கியா எவ்வளவோ முயன்றும் அவருக்கு பிசிசிஐ வாய்ப்பளிக்கவே இல்லை.

இந்திய கிரிக்கெட் லீக் போட்டிகளில் விளையாடியபோது மேட்ச் ஃபிக்ஸிங்கில் ஈடுபட்டதாக, தினேஷ் மோங்கியா மீது புகார்கள் எழுந்தன. அதுவும் அவர் மீதான களங்கமாகத் தொடர்ந்தது. நீண்ட காத்திருப்புக்குப் பின்னர் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக தினேஷ் மோங்கியாவுக்கு பிசிசிஐ வாய்ப்பளித்தது. 2019-ல் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்தார்.

இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் கஜேந்திர சிங் ஷெகாவத் முன்னிலையில் பஞ்சாப் மாநில பாஜகவில் இன்று அவர் இணைந்திருக்கிறார். அவருடன் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஃபதே சிங் பாஜ்வா, பல்வீந்த சிங் லாட்டி உள்ளிட்டோரும் பாஜகவில் சேர்ந்தனர்.

பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் தொடங்கியிருக்கும் பஞ்சாப் லோக் காங்கிரஸ் கட்சி, சுக்தேவ் திண்ட்ஸாவின் சிரோமணி அகாலிதளம் (சன்யுக்த்) கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து இந்தத் தேர்தலை எதிர்கொள்கிறது பாஜக.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட தினேஷ் மோங்கியாவுக்கு வாய்ப்பளிக்கப்படும் எனத் தெரிகிறது. காங்கிரஸில் களமாடிவரும் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோ சிங் சித்துவுக்குப் போட்டியாக, பாஜக தரப்பில் தினேஷ் மோங்கியா வளர்வாரா எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

x