சஃப்தர்ஜங் மருத்துவமனையில் மருத்துவர்களை அடைத்துவைத்த டெல்லி போலீஸார்!


டெல்லியில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (டிச.27) போராட்டம் நடத்திய பயிற்சி மருத்துவர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் தள்ளுமுள்ளு ஏற்பட்ட நிலையில், இன்றும் மருத்துவர்களின் போராட்டம் தொடர்கிறது. இன்று சஃப்தர்ஜங் மருத்துவமனையில் அவர்களுக்கும், டெல்லி போலீஸாருக்கும் இடையில் மீண்டும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி நிர்மாண் பவன் நோக்கி ஊர்வலமாகச் செல்ல முயன்ற பயிற்சி மருத்துவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

நீட் முதுநிலை நுழைவுத் தேர்வுக்குப் பிறகான கவுன்சிலிங் மற்றும் கல்லூரி சேர்க்கையில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகப் பயிற்சி மருத்துவர்கள் சங்கக் கூட்டமைப்பு (ஃபோர்டா) கடந்த ஒரு மாதமாகப் போராட்டம் நடத்திவருகிறது. போதிய மருத்துவர்கள் இல்லாததால், கூடுதல் பணிச்சுமைக்கு ஆளாவதாகத் தெரிவித்திருக்கும் அவர்கள், புதிய பயிற்சி மருத்துவர்களைப் பணியில் அமர்த்த வேண்டும் எனக் கோரிவருகிறார்கள்.

2020 டிசம்பரிலேயே நடைபெற்றிருக்க வேண்டிய நீட் தேர்வு, கரோனா பெருந்தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்டு 2021 செப்டம்பரில் நடந்தது. 2021-22 கல்வி ஆண்டில், மருத்துவப் படிப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு, பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. இதன் அடுத்தகட்ட விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறுகிறது.

இதனால், நீட் தேர்வு முடிந்த பின்னரும் முதுநிலை மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான கவுன்சிலிங் இன்னும் நடத்தி முடிக்கப்படவில்லை. முதுநிலை மருத்துவப் படிப்பின் முதலாம் ஆண்டில் மருத்துவர்கள் சேர்க்கை நடைபெறவில்லை என்பதால், 2-ம் ஆண்டு மருத்துவர்களுக்குக் கூடுதல் சுமை ஏற்பட்டிருக்கிறது. முதுநிலைப் படிப்பில் பல்வேறு மருத்துவப் பயிற்சிகள் அளிக்கப்படும். ஏற்கெனவே கூடுதல் சுமை இருப்பதால், அவற்றில் கலந்துகொள்ள முடியவில்லை எனப் பயிற்சி மருத்துவர்கள் கவலை தெரிவித்துவருகிறார்கள்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியாவின் இல்லத்தை நோக்கிப் பேரணி நடத்த பயிற்சி மருத்துவர்கள் முயன்றனர். அப்போது, காவலர்கள் தங்களைத் தடுத்து நிறுத்தியதாகவும் அதில் சில பயிற்சி மருத்துவர்கள் காயமடைந்ததாகவும் பயிற்சி மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துப் போராட்டத்தில் இறங்கினர். பெண் மருத்துவர்களை ஆண் காவலர்கள் கண்ணியக் குறைவாக நடத்தியதாகவும் புகார் எழுந்தது. அதேவேளையில், மருத்துவர்கள் தங்களைத் தாக்கியதாகப் போலீஸார் தெரிவித்தனர். இதையடுத்து 12 பேர் கைதுசெய்யப்பட்டனர். பின்னர் நள்ளிரவு வரை, சரோஜினி நகர் காவல் நிலையம் அருகே மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சில மருத்துவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது.

இந்நிலையில், சஃப்தர்ஜங் மருத்துவமனையில் இன்றும் பயிற்சி மருத்துவர்கள் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு கூடிய போலீஸார் அந்த மருத்துவமனையின் அனைத்து வாயில்களையும் மூடி அங்கிருந்து மருத்துவர்கள் வெளியே செல்ல முடியாத வகையில் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு கூடியிருந்த மருத்துவர்கள் முழக்கங்களை எழுப்பத் தொடங்கினர்.

“எங்கள் உரிமையைக் கேட்கக்கூட அனுமதி மறுக்கப்படுகிறது” என அங்கிருக்கும் பயிற்சி மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். பயிற்சி மருத்துவர்கள் நகர முடியாத வகையில் 2 அடுக்குகளில் போலீஸார் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

x