ஜனவரி 1 முதல் சிறார்களுக்கான தடுப்பூசி முன்பதிவு: பதிவு செய்வது எப்படி?


ஒமைக்ரான், டெல்மைக்ரான் என்று கரோனா பெருந்தொற்று புதுப்புது வடிவத்தில் அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்குப் பள்ளிகளுக்கே நேரடியாகச் சென்று கரோனா தடுப்பூசிகளைச் செலுத்தத் தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. கரோனாவை வெல்லும் ஒரே வழியாக அறிவியல் காட்டும் வழி தடுப்பூசிகள். தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 2 தவணைகளாகத் தடுப்பூசிகள் நாடு முழுவதும் செலுத்தப்பட்டுவருகிறது. தமிழகத்தில் தற்போதுவரை பதினாறு மெகா தடுப்பூசி முகாம்கள் நடந்துள்ளது.

இதற்கிடையே 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு ஜனவரி 3-ம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இதைத் தொடர்ந்து ஜனவரி 10-ம் தேதி முதல் சுகாதார பணியாளர்கள், முன் களப்பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படும் என்றும் பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இந்தியாவில் 15-18 வயதினருக்கான கரோனா தடுப்பூசிக்கு ஜனவரி 1-ம் தேதி முதல் கோவின் (CoWIN) இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று கோவின் இயக்குநர் ஆர்.எஸ். சர்மா தெரிவித்துள்ளார்.

தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு முன்பதிவு செய்ய ஆதார் அட்டை இல்லாதவர்கள் தங்களுடைய 10-ம் வகுப்பு பள்ளி அடையாள அட்டையைக் காட்டி முன்பதிவு செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கேவின் இணையதளத்தில், அடையாள அட்டைப் பட்டியலில் 10-ம் வகுப்பு அடையாள அட்டை இணைக்கப்படும் என்று கோவின் இயக்குநர் ஆர்.எஸ். சர்மா அறிவித்துள்ளார். பெற்றோர்களும் ஆசிரியர்களும் சிறுவர்களைத் தடுப்பூசி போட்டுக்கொள்ள ஊக்குவிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

x