"பிஹார் பாய்லர் வெடிப்பு, தவறாகக் கையாண்டதால் நிகழ்ந்த விபத்து!"


பிஹாரில் நேற்று (டிச.26) நடந்த பாய்லர் வெடிப்புச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், இது பாய்லர் கருவிகளைத் தவறாகக் கையாண்டதால் ஏற்பட்ட விபத்து என அம்மாநில தொழிலாளர் வளத்துறை அமைச்சர் ஜிவேஷ் மிஸ்ரா விளக்கமளித்திருக்கிறார்.

பிஹார் மாநிலத்தின் முஸாஃபர்நகரின் ‘பேலா இண்டஸ்ட்ரி’ பகுதியில் இயங்கிவரும் நொறுக்குத்தீனி தயாரிப்பு நிறுவனத்தின் பாய்லர் நேற்று வெடித்துச் சிதறியதில் 7 பேர் உயிரிழந்தனர். 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாய்லர் வெடிப்பதற்கு முன்னர் வெடிச் சத்தம் கேட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்துச் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜிவேஷ் மிஸ்ரா, “2020-ல் அமைக்கப்பட்ட தொழிற்சாலை இது. பாதுகாப்பு நிபந்தனைகளுக்குட்பட்டுதான் இது உருவாக்கப்பட்டது. கடந்த மே மாதம் இதன் பாதுகாப்புத் தரம் ஆய்வுசெய்யப்பட்டு, நல்ல நிலையில் இயங்குவதாகவும் சான்றிதழ் வழங்கப்பட்டது” என்று கூறியிருக்கிறார்.

“முதற்கட்ட தகவல்களின்படி, பாய்லர் கருவிகளைத் தவறாகக் கையாண்டதால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது. இது தொடர்பாக விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டிருக்கிறது. முழுமையான விசாரணை நடத்தி முடிக்கப்படும் வரை எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

உயிரிந்தோரின் குடும்பத்தினருக்குத் தலா 4 லட்ச ரூபாய் வழங்கப்படும் என பிஹார் அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

x