சந்திரபாபு நாயுடு பதவியேற்பு முதல் நாடாளுமன்றக் கூட்டத்தொடர் வரை | டாப் 10 விரைவுச் செய்திகள்


> 4வது முறையாக ஆந்திர முதல்வரான சந்திரபாபு நாயுடு: ஆந்திர மாநிலத்தின் முதல்வராக 4-வது முறையாக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு விஜயவாடா அருகே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரம்மாண்டமான விழாவில் பதவியேற்றுக் கொண்டார். இதில் பிரதமர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜெ.பி. நட்டா, நிதின் கட்கரி, ரஜினிகாந்த், சிரஞ்சீவி, ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் அமைச்சரானார். மேலும் 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர்.
கடந்த 1995ம் ஆண்டு சந்திரபாபு நாயுடு ஆந்திராவின் முதல்வராக முதல்முறையாக பதவியேற்றுக்கொண்டார். கடந்த 2004ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசம் இரண்டாக பிரிக்கப்படுவதற்கு முன்பு சந்திரபாபு நாயுடு தொடர்ந்து 9 ஆண்டுகள் ஆந்திராவை தலைமையேற்று வழிநடத்தினார். மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பின்பு மீண்டும் 2014 - 2019 வரை சந்திரபாபு நாயுடு மீண்டும் முதல்வராக இருந்தார்.

> ஜுன் 24 -ஸ ஜூலை 3 வரை நாடாளுமன்றக்கூட்டத் தொடர்: வரும் 24-ம் தேதி 18-வது நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் பதவிப்பிரமாணம் செய்துகொள்வார்கள் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு அறிவித்துள்ளார். முதல் மூன்று நாட்கள் புதிய எம்பிக்களின் பதவியேற்பு விழா நடைபெறும். அதேபோல், சபாநாயகர் தேர்வும் நடைபெறும். தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் ஜூன் 27 அன்று உரையாற்ற உள்ளார்.

> ஜம்முவில் மீண்டும் தீவிரவாதிகள் தாக்குதல்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் இருவேறு இடங்களில் மீண்டும் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளன. இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான். அதேநேரம், 6 வீரர்கள் காயமடைந்துள்ளனர். சத்தர்கலா பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் ராஷ்ட்ரிய ரைபிள்ஸ் கூட்டுப்படை மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் 5 வீரர்கள் மற்றும் ஒரு சிறப்பு அதிகாரி உட்பட 6 பேர் காயமடைந்தனர். அதேபோல், ஜம்முவின் கதுவா பகுதியில் தாக்குதல் நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு தீவிரவாதிகளில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

> தண்ணீர் பிரச்சினையில் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்: தேசிய தலைநகரின் தண்ணீர் நெருக்கடிக்கு மத்தியில் டேங்கர் மாஃபியாக்களின் செயல்பாட்டைத் தடுக்க தவறியதற்காக டெல்லி ஆம் ஆத்மி அரசினை உச்ச நீதிமன்றம் புதன்கிழமை கண்டித்தது. பொய்யான அறிக்கைகள் வெளியிடப்பட்டதாக கூறிய உச்சநீதிமன்றம், தண்ணீர் வீணாவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாணபத்திரம் தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

> உ.பி-யில் தோல்வி குறித்து பாஜக தலைமைக்கு அறிக்கை: உத்தரப்பிரதேசத்தில் பாஜக வேட்பாளர்கள் தோல்வி குறித்து அதன் தேசிய தலைமைக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதில், தொகுதிகளில் கட்சியினரும், தலைவர்களும் செய்த சதியும், நம்பிக்கை துரோகமும் தோல்விக்கானக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

> தொடர் விடுமுறைக்காக 1,300 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு: பக்ரீத் பண்டிகை மற்றும் முகூர்த்த நாளையொட்டி சென்னையில் இருந்து 1,300 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஜூன் 14, 15, 16 தேதிகளில் 1,270 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

> குறுவை தொகுப்புத் திட்டத்தை உடனடியாக அறிவிக்க வேண்டும்: மேட்டூர் அணை இன்று (ஜுன் 12) திறக்கப்படாத நிலையில், நிலத்தடி நீர் பாசனத்திற்கு உதவும் வகையில் குறுவை தொகுப்புத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

> புதிய உச்சம் தொட்ட நிஃப்டி: நிதி மற்றும் ஐடி பங்குகளின் ஏற்றம் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் தொடங்கின. மோடி 3.0 வின் கீழ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மீது முதலீட்டார்கள் நம்பிக்கை கொண்டுள்ளதால் நிஃப்டி 170 புள்ளிகள் உயர்ந்து 23,441.95 ஆக புதிய உச்சம் தொட்டது. சென்செக்ஸும் 500 புள்ளிகள் உயர்வடைந்ததிருந்தது.

> இந்திய பயணம் மாலத்தீவு அதிபர் கருத்து: தனது முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணம் பெரும் வெற்றிபெற்றிருப்பதாகவும், இப்பயணம் இருநாடுகளுக்கு இடையேயான உறவினை வலுப்படுத்தும் என்று நம்புவதாகவும் மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு தெரிவித்துள்ளார். சீன ஆதரவு அதிபராக அறியப்படும் முய்சு இந்திய பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

> ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்யுமா இந்திய அணி?: ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இன்று இரவு 8 மணிக்கு நியூயார்க்கில் உள்ள நசாவ் கவுண்டி மைதானத்தில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் ‘ஏ’பிரிவில் உள்ள இந்தியா - அமெரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி மட்டை வீச்சுக்கு கடும் சவாலாக திகழும் நசாவ் கவுண்டி மைதானத்தில் தொடர்ச்சியாக 3-வது ஆட்டத்தில் விளையாட உள்ளது. இரு வெற்றிகள் பெற்று 4 புள்ளிகளுடன் இந்திய அணி தனது பிரிவில் முதலிடத்தில் உள்ளது.

x