காஷ்மீரைவிடவும் ஆபத்தான நிலையில் பஞ்சாப்?


பஞ்சாப் மாநிலம், லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று (டிச.23) நடந்த குண்டுவெடிப்பில் 2 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர். சமீபகாலமாக, பஞ்சாபில் மத அவமதிப்புச் செயல்கள், கும்பல் கொலைகள் நடந்துவந்த நிலையில், நேற்று நடந்த இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்நிலையில், பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருப்பதையொட்டி, பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழும் என்று மாநிலக் காவல் துறைக்கு உளவு அமைப்புகள் முன்கூட்டியே தகவல் தெரிவித்ததாகவும், பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கவும், சமூக வலைதளங்களை உன்னிப்பாகக் கண்காணிக்கவும் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

“பஞ்சாபில் பயங்கரவாதச் செயல்கள் நடக்கக்கூடும் என மாநிலக் காவல் துறையினருடன் கூட்டம் நடத்தி எச்சரிக்கை விடுத்திருந்தோம். சமூக வலைதளங்களை உன்னிப்பாகக் கண்காணிக்குமாறும், வதந்திகள் பரப்பப்படுவதைக் கட்டுப்படுத்துமாறும் கேட்டுக்கொண்டிருந்தோம். இன்றைய சூழலில் காஷ்மீரைவிடவும் பலவீனமான நிலையில் இருக்கிறது பஞ்சாப்” என்று உளவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியிருக்கிறார்.

“கடந்த சில மாதங்களாகவே, எல்லையில் டிரோன் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. அவற்றின் வழியே வெடிகுண்டுகள், ஆயுதங்கள் உள்ளிட்டவை பஞ்சாபுக்குள் கொண்டுவரப்படுகின்றன. அவற்றை வைத்து மாநிலத்தின் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வேலைகள் நடைபெறலாம் எனக் கருதப்படுகிறது" என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்குள் நுழைந்து புனித நூலையும், வாளையும் கைப்பற்ற முயன்றதாக மர்ம நபர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டார். கபூர்தாலாவிலும் சீக்கியர்கள் புனிதமாகக் கருதும் நிஷான் சாஹிப் கொடியை அவமதித்ததாக ஒருவர் அடித்துக்கொல்லப்பட்டார். குர்தாஸ்பூரில், பாகிஸ்தான் எல்லையைக் கடந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற ஒருவர் எல்லைப் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவமும் நடந்திருக்கிறது. அமிர்தசரஸ், குர்தாஸ்பூர் சம்பவங்களில் கொல்லப்பட்ட நபர்கள் குறித்த விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

டிசம்பர் 20-ல் அதே பகுதியில் ஒரு டிரோன் பறந்தது தெரியவந்திருக்கிறது. பிஎஸ்எஃப் வீரர்கள் அதை நோக்கித் துப்பாக்கியால் சுட்டபோதும் அது பாகிஸ்தான் எல்லைக்குத் திரும்பிச் சென்றுவிட்டது.

இதுபோன்ற சம்பவங்கள் இனி நிகழாதவண்ணம் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டிருப்பதாக மாநில உளவுத் துறையினர் தெரிவித்திருக்கிறார்கள்.

“எதிர்வரும் தேர்தலையொட்டி மாநிலத்தில் சட்டம் ஒழுங்கைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது” எனப் பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி கூறியிருந்த நிலையில், உளவுத் துறையினர் தெரிவித்திருக்கும் இத்தகவல்கள் கவனம் பெறுகின்றன. சட்டம் ஒழுங்குப் பாதுகாப்பில், பஞ்சாப் காங்கிரஸ் அரசு கவனம் செலுத்தவில்லை என அகாலி தளம் குற்றம்சாட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

‘குண்டுவெடிப்பில் தொடர்புடைய குற்றவாளிகளை 72 மணி நேரத்தில் கண்டுபிடிக்க வேண்டும்’ என்று உள் துறை அமைச்சகம் உத்தரவிட்டிருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

x