ஏழைகளுக்காக ரூ.960 கோடி நிதியுதவி!


ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ஏழைகளுக்கு ரூ.960 கோடி நிதியுதவித் திட்டத்தை நேற்று (டிச.22) தொடங்கிவைத்திருக்கிறார். 30 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.1,444 கோடி நிவாரண உதவியாக அறிவித்த சூட்டோடு, ஏழைகளுக்கு இதை அறிவித்திருக்கிறார். ‘பிஜு ஸ்வாஸ்த்ய கல்யாண் யோஜனா’ (பிஜு மருத்துவ சிசிச்சைத் திட்டம்) அட்டை வைத்திருப்பவர்களுக்கும் ரேஷன் அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 வாழ்க்கைச் செலவுக்கான தொகையாக அறிவித்திருக்கிறார். இது பெருந்தொற்றுக்காலத்தில் வேலையும் வருமானமும் இல்லாமல் இருந்தவர்களின் அவசர நிதித் தேவைகளுக்காக என்று அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டிருக்கிறது.

எதிர்வரும் பஞ்சாயத்துத் தேர்தல்களில் மக்களுடைய வாக்குகளைப் பெறுவதற்காகவே இந்தத் திட்டம் என, ஒடிசாவின் முக்கிய எதிர்க்கட்சிகளான பாஜக, காங்கிரஸ் இரண்டுமே என்று கண்டித்துள்ளன. பெருந்தொற்றுக் காலத்தில் மக்கள் அவதிப்பட்டபோது அரசு தூங்கிக்கொண்டு இருந்ததா என்றும் அக்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

எது எப்படி இருந்தாலும் மக்களுக்கு அரசு நேரடியாக அவரவர் வங்கிக் கணக்குக்கே பணம் செலுத்துகிறது. இது போதுமோ, போதாதோ அதெல்லாம் பிறகு. இப்போதைக்கு அவசரத் தேவைக்கு அரசு பணம் கையில் கிடைப்பது ஏழைகளுக்கு உண்மையிலேயே தெம்பளிக்கும். தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டம், மாநில உணவுப் பாதுகாப்புத் திட்டம் இரண்டின்கீழும் வரும் அனைவருக்கும் ரொக்க உதவியை, இன்னும் 7 நாட்களுக்குள் அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தியாக வேண்டும் என்று முதல்வர் ஆணையிட்டிருக்கிறார்.

மாநிலம் முழுதும் உள்ள மகளிர் சுய உதவிக் குழுவினருடன் புதன்கிழமை மாலை நவீன் உரையாடினார். மகளிருக்கு அதிகாரம் அளிக்க பல திட்டங்களைத் தொடங்கி வைத்தார். மகளிர் அமைப்புகளுக்கு வட்டி மானியமாகத் தனியாக ரூ.200 கோடியை அளித்தார். மகளிர் சுய உதவிக் குழுவினர் தயாரிக்கும் பொருட்களைத் தலைநகர் புவனேஸ்வரத்தில் அவர்களே விற்பனை செய்ய, மகளிர் சக்தி பஜார் கட்டிடத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

எங்கெல்லாம் அரசு வங்கிகளுக்குக் கிளைகள் இல்லையோ அந்த ஊர்களில் மகளிர் சுய உதவிக் குழுவினரே வங்கிகளின் பிரதிநிதிகளாகச் செயல்படுவார்கள் என்று அறிவித்தார். மாநிலத்தின் ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒவ்வொரு வார்டிலும் மகளிர் சக்தி குழுவுக்காக வீடுகள் கட்டித் தரப்படும். அது மட்டுமின்றி வட்டாரங்களிலும் மாவட்டங்களிலும் மகளிர் சக்தி பவன் என்ற பெயரில் கட்டிடங்கள் கட்டித் தரப்பட்டு, அங்கே அவர்களுடைய அலுவலகங்கள் திறக்கப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு கோடி ரூபாய் அளிக்கப்படும் என்றார்.

மகளிர் சக்தி குழுக்களிடம் ரூ.5,000 கோடி மதிப்பிலான பணிகளை ஒதுக்க, முன்னதாக மாநில அமைச்சரவை முடிவு செய்தது. ஊராட்சிகளில் செயல்படும் சமுதாய உதவியாளர்களுக்கு அரசு சீருடைகளை வழங்கும் என்ற அறிவிப்பையும் நவீன் வெளியிட்டார். மார்ச் 8-க்குள் உள்ளாட்சி மன்றத் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஒடிசா மாநில உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. மூன்றடுக்கு உள்ளாட்சி மன்றங்களுக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவிருக்கிறது.

மாநிலத்தில் உள்ள மக்களுக்கு நேரடியாகப் பணம் தரும் முறையால்தான், பொருளாதாரத் தூண்டல் நடவடிக்கைகளை எடுக்க முடியும் என்று மேற்கு வங்கப் பொருளியல் ஆலோசகர் அமித் மித்ரா சில நாட்களுக்கு முன்னர் கூறியது நினைவுகூரத்தக்கது.

x