சோனியா, பிரியங்காவுக்கு பெண் கமாண்டோ படை பாதுகாப்பு


சிஆர்பிஎஃப் பெண் கமாண்டோக்கள்

காங்கிரஸ் தலைவர்களான சோனியா காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் பிற இஸட் பிளஸ் பாதுகாப்பு வளையத்திலிருக்கும் விஐபிக்களுக்கு, பெண் கமாண்டோ படையினர் கூடுதலாக பாதுகாப்பு அளிக்க உள்ளனர்.

விஐபிகளுக்கு சிஆர்பிஎஃப் படையின் ஆண் கமாண்டோக்கள் அடங்கிய அணி பாதுகாப்பு அளித்து வருகிறது. இஸட் பிளஸ் என்ற பிரிவின் கீழான உயரடுக்கு பாதுகாப்பு வளையத்திலிருக்கும் தலைவர்களுக்கு, இந்த ஆண் கமாண்டோக்கள் இதுவரை பாதுகாப்பு அளித்து வந்தனர். தற்போது இவர்கள் அடங்கிய பாதுகாப்பு ஏற்பாட்டில் பெண் கமாண்டோக்களும் இணைய உள்ளனர்.

இதற்கான 32 பெண் கமாண்டோ வீராங்கனைகளை கொண்ட முதல் அணி, டிச.10 அன்று தங்களது பயிற்சியை நிறைவு செய்தது. இதையடுத்து அடுத்த ஆண்டு ஜனவரி முதல் இவர்கள் விஐபி பாதுகாப்பில் களம்காண இருக்கிறார்கள். அடுத்து வரும் 5 மாநில தேர்தலில், இஸட் பிளஸ் அரசியல் தலைவர்களின் பிரச்சார களங்களின் பாதுகாப்புப் பணிகளை இவர்கள் மேற்கொள்வார்கள்.

ஆண் கமாண்டோக்களுக்கு இணையாக பல்வேறு ஆயுதங்கள், ராணுவத் தளவாடங்களை கையாள்வதுடன், வெறுங்கையுடன் எதிராளியை சமாளிக்கவும் இந்தப் பெண் கமாண்டோக்கள் பயிற்சி பெற்றுள்ளனர். குறிப்பாகப் பெண் பார்வையாளர்களை எதிர்கொள்வது, சந்தேகத்துக்குரிய பெண்களை மடக்குவது, விஐபிக்களின் வீடு மற்றும் தங்குமிடங்களின் பாதுகாப்பு ஆகிய பணிகளில் இந்தப் பெண் கமாண்டோக்கள் முன்னிற்பார்கள்.

உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட பலர் இஸட் பிளஸ் வளைய பாதுகாப்பில் அடங்குகிறார்கள்.

x