கோவிட் 19: மரபணு வரிசைமுறை ஆய்வுகளில் மாநில அரசுகள் பின்தங்குகின்றனவா?


ஒமைக்ரான் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், கரோனா வைரஸ் தொடர்பான மரபணு வரிசைமுறை தொடர்பான ஆய்வுகளில் இந்தியா எதிர்பார்க்கும் பலன் கிட்டவில்லை. சேகரிக்கப்பட்ட மாதிரிகளில் கரோனா வைரஸ் மரபணு வரிசை தொடர்பான ஆய்வுகளை நடத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. எனினும், பல மாநில அரசுகள் அதை முழுமையாகச் செய்து முடிக்கவில்லை எனத் தெரிகிறது.

கடந்த நவம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், ஒரே மாதத்தில் அது 106 நாடுகளில் பரவிவிட்டது. இந்தியாவில் இதுவரை 236 பேர் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். தமிழகத்தில் மேலும் 33 பேருக்கு ஒமைக்ரான் தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

இதற்கிடையே, டிசம்பர் 3-ல் மத்திய சுகாதாரத் துறைச் செயலர் ராஜேஷ் பூஷண், “சேகரிக்கப்படும் மாதிரிகளில், கரோனா தொற்று உறுதிசெய்யப்படுபவர்களின் மாதிரிகளை முழுமையான மரபணு வரிசை ஆய்வுக்குட்படுத்த வேண்டும்” என்று மாநில அரசுகளுக்குக் கடிதம் எழுதியிருந்தார்.

இதுதொடர்பாக, ‘ஸ்க்ரால்.இன்’ இணையதளம் திரட்டியிருக்கும் தகவல்களைப் பார்க்கும்போது, இதைப் பல மாநிலங்கள் பின்பற்றவில்லை எனத் தெரியவந்திருக்கிறது.

மரபணு வரிசைமுறையின் மூலம், குறிப்பிட்ட வைரஸ் எந்த மரபியல் அடிப்படையில் உருவாகியிருக்கிறது என்பதைக் கண்டறிய முடியும். அத்துடன், வைரஸ் உருமாற்றம் அடையும் தன்மையையும், திரிபுகளையும் கண்டறிய முடியும்.

ஐரோப்பிய நாடுகள் அதிக அளவில் மரபணு வரிசைமுறை குறித்த தரவுகளைப் பகிர்ந்துகொள்வதாக, உலகளாவிய தரவுகளைப் பகிர்வதற்கான அமைப்பான ஜிஎஸ்ஏஐடி கூறியிருக்கிறது. அமெரிக்காவில், 73.2 சதவீத மாதிரிகளில் ஒமைக்ரான் இருப்பதை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கண்டறிந்திருக்கிறது. குறிப்பாக, ஒரே வாரத்தில் டெல்டா வைரஸைவிட ஒமைக்ரான் திரிபு பல மடங்கு அதிகரித்ததை அந்த மாதிரிகளிலிருந்து விஞ்ஞானிகள் கண்டறிந்திருக்கிறார்கள். ஒரு வாரத்துக்கு முன்பு 12.6 சதவீதமாக ஒமைக்ரானும், 87சதவீதமாக டெல்டாவும் இருந்த நிலையில் டிச.20-ல் ஒமைக்ரான் 73.2 சதவீதமாக உயர்ந்தது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்தியாவில், கடந்த சில நாட்களாக, தினமும் 7,000 முதல் 8000 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று கண்டறியப்படுகிறது. அதில் கேரளத்தில் 40 சதவீதமும், மகாராஷ்டிரத்தில் 12 சதவீதமும் உறுதிசெய்யப்படுகிறது. டெல்லியில் தினமும் 100-க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று உறுதிசெய்யப்படுகிறது. அதிக அளவில் கரோனா மாதிரிகள் சேகரிக்கப்படுவதால் அவை அனைத்தையும் மரபணு வரிசைமுறை ஆய்வில் உட்படுத்துவது எளிதல்ல என்றே மருத்துவ நிபுணர்களும் ஒப்புக்கொள்கிறார்கள்.

எனினும், இந்தியாவின் எல்லா மாநிலங்களும் இவ்விஷயத்தில் முனைப்புடன் செயல்படுவது ஒமைக்ரான் குறித்த தகவல்களைப் பெறவும், அதன் பரவலைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

x