லூதியானா மாவட்ட நீதிமன்றத்தில் குண்டுவெடிப்பு; 2 பேர் உயிரிழப்பு


பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் உள்ள மாவட்ட நீதிமன்றக் கட்டிடத்தின் 2-வது தளத்தில், இன்று நண்பகல் 12.25 மணி அளவில் நடந்த குண்டுவெடிப்பில் இருவர் உயிரிழந்திருக்கிறார்கள். 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருக்கிறார்கள்.

சிலிண்டர் வெடித்ததாகவே ஆரம்பத்தில் அங்கிருந்தவர்கள் நினைத்திருக்கிறார்கள். வெடிப்பின் வீரியத்தைப் பார்த்தபோது அது குண்டுவெடிப்பாகவே இருக்கும் எனப் பேசப்படுகிறது. நீதிமன்றக் கட்டிடத்தின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டிருப்பதுடன் ஜன்னல்களும் உடைந்து நொறுங்கியிருக்கின்றன. “பஞ்சாபிலும் இந்தியாவிலும் அமைதி நிலவுவதை விரும்பாதவர்கள் இந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியிருக்கிறார்கள்” என பஞ்சாப் முதல்வர் சரண்ஜீத் சிங் சன்னி கூறியிருக்கிறார். சம்பவ இடத்துக்கு அவர் விரைந்திருக்கிறார்.

நீதிமன்ற வளாகத்தில் சென்ஸார் வேலை செய்யவில்லை என்றும், பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாகச் செய்யப்படுவதில்லை என்றும் பலர் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்திருக்கின்றன. காங்கிரஸ் அரசு முழுமையாகத் தோல்வியடைந்துவிட்டதாக அகாலி தளம் கட்சி விமர்சித்திருக்கிறது.

இதுவரை இந்தக் குண்டுவெடிப்புக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என்றாலும், இது பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கும் என்றே முதற்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் குண்டுவெடிப்பில் காலிஸ்தானி இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்குத் தொடர்பு இருக்கிறதா என்றும் பேச்சுகள் எழுந்திருக்கின்றன. தற்போது பஞ்சாப் போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்திவரும் நிலையில், தேசியப் புலனாய்வு முகமையும் (என்ஐஏ) இச்சம்பவம் குறித்த விசாரணையில் இறங்கும் எனத் தெரிகிறது.

x