“கட்சி அழிக்கப்படுகிறது” - ஹரீஷ் அதிருப்தியை முன்வைத்து மணீஷ் கிளப்பும் புதிய பூதம்


மணீஷ் திவாரி

உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், சோனியா காந்தி குடும்பத்துக்கு மிக நெருக்கமான தலைவருமான ஹரீஷ் ராவத் நேற்று போட்ட அதிருப்தி வெடிகுண்டுகளின் அதிர்வு அடங்காத நிலையில், அது தொடர்பாக, ஜி-23 தலைவர்களில் ஒருவரான மணீஷ் திவாரி இன்று வெளியிட்டிருக்கும் ட்வீட் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

“விநோதம்தான் இல்லையா? தேர்தல் கடலில் நாம் நீந்தியாக வேண்டும். ஆனால், அமைப்பு என்னை ஆதரிக்காமல், பாராமுகம் காட்டுகிறது அல்லது எதிர்மறையாகச் செயல்படுகிறது. நான் யாரைப் பின்தொடர வேண்டுமோ அவர்களின் ஆட்கள் என் கைகளைக் கட்டிப்போட்டிருக்கிறார்கள். ‘ரொம்பவே பார்த்தாயிற்று ஹரீஷ் ராவத். நிறைய செய்துவிட்டாய். இனி ஓய்வெடுக்க வேண்டிய தருணம்’ எனும் எண்ணம் எனக்குள் வந்துவிட்டது” என்று ஹரீஷ் ராவத் வெளியிட்ட ட்வீட்டுகள் நேற்று உத்தராகண்டில் மட்டுமல்லாமல் தேசிய அரசியல் களத்திலும் அனலைக் கிளப்பின.

ஹரீஷ் ராவத்

தனது ட்வீட்களில் யார் பெயரையும் குறிப்பிடாததால், அவர் காங்கிரஸின் டெல்லி தலைமையைப் பற்றி இப்படிச் சொல்கிறாரா அல்லது உத்தராகண்ட் காங்கிரஸுக்குள் நிலவும் பூசல்களால் இப்படிப் பேசுகிறாரா எனும் விவாதங்கள் எழுந்தன. அடுத்த ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் அவரது இந்தக் கருத்துகள் காங்கிரஸை பலவீனப்படுத்தும் என்றும் பேச்சு எழுந்தது.

தனது ட்வீட்டுகள் தொடர்பாக ஹரீஷ் ராவத் எதையும் விளக்கமாகச் சொல்லவில்லை. நேற்று செய்தியாளர்கள் அதுகுறித்துக் கேள்வி எழுப்பியபோதுகூட, நேரம் வரும்போது பேசுவதாகச் சொல்லி முடித்துக்கொண்டார். பாஜக மீதான விமர்சனங்களைத்தான் அதிகம் முன்வைத்தார்.

இந்நிலையில்தான், மணீஷ் திவாரியின் ட்வீட் கவனம் பெறுகிறது. ‘காங்கிரஸ் கட்சிக்கு முழுநேரத் தலைவர் வேண்டும்; உட்கட்சித் தேர்தல் முறையாக நடத்தப்பட வேண்டும்’ என்று வலியுறுத்தி கட்சித் தலைமைக்குக் கடிதம் எழுதி பரபரப்பை ஏற்படுத்திய 23 காங்கிரஸ் தலைவர்கள் ‘ஜி-23’ குழுவினர் என அழைக்கப்படுகின்றனர்.

அவர்களில் முக்கியமானவரான மணீஷ் திவாரி, இன்று அதிரடியாக ஒரு ட்வீட் செய்திருக்கிறார். அதில், “முதலில் அசாம், பின்னர் பஞ்சாப், இப்போது உத்தராகண்ட். கட்சி அழிக்கப்படுகிறது. (அதைத் தடுக்க) எந்த முயற்சியும் எடுக்கப்படுவதில்லை!” என அவர் குறிப்பிட்டிருக்கிறார். அதில் ஹரீஷ் ராவத்தையும் டேக் செய்திருக்கிறார். இதன் மூலம், காங்கிரஸ் தலைமையை அவர் மீண்டும் விமர்சித்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் பேசத் தொடங்கியிருக்கின்றன.

ஏற்கெனவே ஹரீஷ் ராவத்தின் ட்வீட்டுகளால் ஏகத்துக்கும் மகிழ்ந்திருக்கும் பாஜகவினர், மணீஷ் திவாரியின் இந்த ட்வீட்டால் இன்னும் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கிறார்கள்.

இதற்கிடையே, ஹரீஷ் ராவத் உள்ளிட்ட உத்தராகண்ட் காங்கிரஸ் தலைவர்கள் நாளை ராகுல் காந்தியைச் சந்தித்துப் பேசவிருப்பதாகச் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. சமாதான முயற்சி தொடங்குமா அல்லது வழக்கம்போல உட்கட்சிப் பிரச்சினைகளுக்குத் தானாகவே தீர்வு கிட்டட்டும் என காங்கிரஸ் தலைமை காத்திருக்குமா என விரைவில் தெரியவரலாம்!

x