குட்டி விலங்குகளைக் குளிரிலிருந்து பாதுகாக்க கம்பளி!


இந்தியாவின் பல பகுதிகளில் மக்களை குளிர் நடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. நேற்று (டிச.22) காஷ்மீரின் குப்வாரா பகுதியில் 3 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருக்கிறது. டெல்லியில் 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. இதனால், கம்பளி உடைகளும், கதகதப்பூட்டும் ஹீட்டர்களும் ஏற்பாடு செய்து குளிரைச் சமாளித்துவருகிறார்கள் மக்கள். சாலையோரம் வசிப்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிவருகிறார்கள்.

குளிர்காலத்தில் கதகதப்பு மனிதர்களுக்கு மட்டும்தானா தேவைப்படுகிறது? விலங்குகள் மட்டும் விதிவிலக்கா என்ன? உலகம் முழுதும் ஒவ்வொரு ஆண்டும் குளிர்காலத்தில் நாய்கள், பூனைகள் முதல் வனவிலங்குகள் வரை ஏராளமான உயிரினங்கள் உடல் விறைத்துப்போய் உயிரிழக்கின்றன.

இந்நிலையில், அசாமில் உள்ள காஸிரங்கா தேசியப் பூங்காவில் உள்ள விலங்குகளுக்குக் கம்பளிகளை ஏற்பாடு செய்திருக்கிறார்கள் பூங்கா நிர்வாகத்தினர். கூடவே, ஹீட்டர்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.

குறிப்பாக, யானைக்குட்டிகளும், காண்டாமிருகக் குட்டிகளும் கம்பளிப் போர்வைகள் போர்த்தப்படுகின்றன. கூடவே, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளும் அளிக்கப்படுகின்றன. விலங்குகளுக்கு மட்டுமல்ல, பறவைகளும் இன்குபேட்டர் வசதியுடன் கதகதப்பான அறைகளில் பராமரிக்கப்படுகின்றன. இப்பூங்காவின் வனவிலங்கு மறுவாழ்வு மற்றும் பாதுகாப்பு மையத்தின் மருத்துவர்கள் இதை முன்னெடுத்திருக்கிறார்கள்.

அசாமின் கோலாகாட், கார்பி ஆங்லாங், நகாவ் ஆகிய மாவட்டங்களில் பரந்து விரிந்திருக்கும் இந்தப் பூங்காவில் காண்டாமிருகங்கள், யானைகள், புலிகள், சாம்பர் மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசிக்கின்றன. இந்தப் பூங்காவில் தற்போது 9 யானைக் குட்டிகள், 5 குதிரைக் குட்டிகளுடன் ஒரு புலிக்குட்டியும் பராமரிக்கப்படுகிறது.

நேற்று காஸிரங்கா பகுதியில் 10 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவான நிலையில், இந்த ஏற்பாடுகள் விலங்கு நல ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கின்றன.

x