ஹல்தியா உர ஆலையை மூடியது யார்?


மேற்கு வங்க மாநிலம் ஹல்தியாவில் உள்ள உர ஆலையில் தங்களுடைய கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் திங்கள்கிழமை (டிச.13) போராடினர். மாநில ஆளுங்கட்சியான திரிணமூல் காங்கிரஸின் கொடிகளை வைத்திருந்த அவர்கள், கோரிக்கைகளை வலியுறுத்த ஆலையின் நுழைவு வாயில் கதவுகளை மூடினர். இதையடுத்து அன்றைய உர உற்பத்தி தடைபட்டது. வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள், திரிணமூல் காங்கிரஸின் தொழிற்சங்க அமைப்பான ஐஎன்டிடியுசி என்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் எனச் சொல்லப்பட்டது.

டை-அம்மோனியம் பாஸ்பேட் என்ற உரத்தைத் தயாரிக்கும் இந்தோரமா இந்தியா பிரைவேட் லிமிட்டெட் என்ற அந்தத் தனியார் நிறுவனம் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆலையில் உற்பத்தியாகும் உரத்தில் 80 சதவீதம் மேற்கு வங்கத்துக்கே தரப்படுகிறது.

இந்நிலையில், தொழிலாளர்களின் திடீர் போராட்டம் குறித்த தகவல், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. ஆளுங்கட்சியின் தொழிலாளர் பிரிவு நடத்திய வேலைநிறுத்தம் என்பதால் நடவடிக்கை எடுக்க ஆலை நிர்வாகம் தயக்கம் காட்டியது. இதையடுத்து டிச.16-ல் சமரசக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்துக்கு மாநில அமைச்சர்கள் சோமன் மகாபாத்ர, அகில் கிரி ஆகியோர் வந்தனர். தொழிலாளர்களால் ஏற்பட்ட பிரச்சினை குறித்து ஆலையின் துணைத் தலைவர் பார்த்தசாரதி பானர்ஜி விவரித்தார். அன்றைய தினம் உற்பத்தி பாதியாகக் குறைந்தது, இந்த நிலை நீடித்தால் ஆலையை மூடுவதைத் தவிர வேறு வழியில்லை என்றும் எச்சரித்தார்.

ஹல்தியா நகராட்சி மன்ற திரிணமூல் கவுன்சிலரும் அந்த ஆலைக்குத் தொழிலாளர்களை ஒப்பந்த அடிப்படையில் ஏற்பாடு செய்பவருமான பிரசாந்த தாஸ், வேலைநிறுத்தத்துக்குக் காரணமானவர்கள் என்று 12 பேரை அடையாளம் கண்டு உடனே அவர்களைப் பணியிடை நீக்கம் செய்தார். அவர்கள் பாஜக தொண்டர்கள், மாநில அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதற்காக திடீர் வேலைநிறுத்தம் செய்தனர் என்றும் குற்றம்சாட்டினார். அதேபோல, இந்த விவகாரத்தில் தங்களுடைய தொழிற்சங்கத்தின் பங்கு ஏதும் இல்லை பாஜகவினர்தான் தொழிலாளர்களைத் தூண்டினர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று ஐஎன்டிடியுசி தலைவர் தபஸ் மைத்தி கூறினார்.

இதை பாஜகவினர் மறுத்தனர். “எங்கு பிரச்சினை என்றாலும் அதை பாஜக மீது சுமத்துவதே திரிணமூலின் வாடிக்கையாகிவிட்டது. அங்கே பணிபுரிந்தவர்களோ, வேலைநிறுத்தத்துக்காக இடைநீக்கம் செய்யப்பட்டவர்களோ பாஜக ஆதரவாளர்கள் கூட இல்லை. இந்த வேலைநிறுத்தத்துக்கும் எங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை” என்று தம்லுக் பகுதி பாஜக தலைவர் நவருண் நாயக் மறுக்கிறார்.

இடைநீக்கம் செய்யப்பட்டவர்களில் ஒருவரான பஞ்சானன் ஹஸ்ரா, “நாங்கள் அனைவரும் திரிணமூல் காங்கிரஸின் தொழிற்சங்க உறுப்பினர்கள்தான். எங்களுடைய கோரிக்கைகளைத் திசைதிருப்ப ஆலை நிர்வாகம் எங்கள் மீது தவறான குற்றச்சாட்டுகளைக் கூறி வழக்குப் பதியவைக்கிறது” என்று சாடினார். கூடவே, “ஐஎன்டிடியுசி உறுப்பினர்கள் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கிறோம் அதனால்தான் திரிணமூல் கட்சியின் கொடிகளுடன் கோரிக்கை முழக்கங்களை எழுப்பினோம்” என்றும் அவர் சொன்னார்.

இந்தச் சண்டையில் தொழிலாளர்களின் கோரிக்கைகள் என்ன, ஆலை நிர்வாகம் அவற்றை ஏற்றுக்கொண்டதா என்பதே வெளிவராமல் போய்விட்டது. மேற்கு வங்கத்துக்கு தொழில் முதலீட்டை வரவேற்கும் முனைப்பில் முதலமைச்சர் மம்தா தீவிரமாகச் செயல்படுகிறார். எனவே, மேற்கு வங்கத்தில் தொழில் துறையில் வேலைநிறுத்தம், அமைதியின்மை என்ற செய்திகூட வெளியே வரக்கூடாது என்று திரிணமூல் அரசு கவனத்துடன் செயல்படுகிறது என்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

x