இந்தியாவில் இரட்டை சதம் அடித்த ஒமைக்ரான்!


இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றாளர்களின் எண்ணிக்கை 200-ஐத் தொட்டுவிட்டது என மத்திய சுகாதாரத் துறை அறிவித்திருக்கிறது. தொற்றுக்குள்ளானோரில் 80 சதவீதம் பேருக்கு எந்த அறிகுறியும் தெரியவில்லை என்றும், 77 பேர் நலம்பெற்றுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மகாராஷ்டிரத்திலும் டெல்லியிலும் தலா 54 பேர் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகியிருக்கிறார்கள். தெலங்கானாவில் 20 பேர், கர்நாடகத்தில் 19, ராஜஸ்தானில் 18, கேரளத்தில் 15, குஜராத்தில் 14 பேர்கள் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்தியாவில் இன்று (டிச.21) 5,326 பேருக்குப் புதிதாகக் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. கடந்த 581 நாட்களில் இது மிகக் குறைந்த எண்ணிக்கை ஆகும். இதுவரை இந்தியாவில் பதிவான கரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை 3.48 கோடி. இன்றைய தேதியில் நாடு முழுவதும் 79,097 கரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இது கடந்த 574 நாட்களில், மிகக் குறைந்த எண்ணிக்கை. கடந்த 24 மணி நேரத்தில் 453 மரணமடைந்திருக்கும் நிலையில், இந்தியாவில் கரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4.78 லட்சமாகியிருக்கிறது.

ஒமைக்ரான் தொற்றுப் பரவல் குறித்து உலக சுகாதார நிறுவனம் தொடர்ந்து எச்சரித்துவருகிறது. நோய் எதிர்ப்புச்சக்தி குறைந்தவர்கள் ஒமைக்ரான் தொற்றுக்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியிருக்கிறார். கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைகள் நெருங்கும் சூழலில், விடுமுறைக் கொண்டாட்டங்களைத் தவிர்ப்பது நல்லது என்று உலக சுகாதார நிறுவனத்தின் டெட்ராஸ் அதானம் அறிவுறுத்தியிருக்கிறார்.

மறுபுறம், 2-வது, 3-வது தலைமுறை தடுப்பூசிகள் உருவாக்கப்படுவது, நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சைகள் போன்றவற்றில் ஏற்பட்டுவரும் முன்னேற்றங்கள், 2022-ல் கரோனா பெருந்தொற்றை முடிவுக்குக் கொண்டுவரலாம் என்றும் நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. அதற்கு மிக முக்கியமானது கரோனா பரவலைத் தடுப்பதுதான். அதற்குத் தடுப்பூசிகளும், முகக்கவசம், தனிமனித இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் அவசியம்.

தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கும், கரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்தவர்களுக்கும் ஒமைக்ரான் தொற்று ஏற்படுவது குறித்த ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

x