பெருந்தொற்று குறித்த ஒருங்கிணைந்த ஆய்வுகளில் இந்தியாவின் பங்கு குறிப்பிடத்தக்கது!


கோவிட் 19 போன்ற தீவிர நோய்த் தொற்றுக்குள்ளானவர்களின் உயிரைக் காப்பாற்றும் மருந்துகள் தொடர்பான ஆய்வுகளில், இந்தியாவின் பங்களிப்பு முக்கியமானது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சவுமியா சுவாமிநாதன் கூறியிருக்கிறார்.

புணேயில் நடைபெற்றுவரும் ‘பானெக்ஸ் - 21’ எனும் கருத்தரங்கில், இன்று (டிச.20) முதல் நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய சவுமியா சுவாமிநாதன் இதைத் தெரிவித்திருக்கிறார். பிம்ஸ்டெக் (BIMSTEC) உறுப்பு நாடுகளின் முன்னெடுப்பாக நடத்தப்படும் கருத்தரங்கு இது. பேரிடர்களின்போது மனிதாபிமான அடிப்படையில் உதவுவது இதன் முக்கிய நோக்கம். இந்தியா, வங்கதேசம், நேபாளம், பூட்டான், மியான்மர், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் இதில் அங்கம் வகிக்கின்றன.

நிகழ்ச்சியில் பேசிய அவர், “சிறிய அளவில் பல்வேறு மருத்துவ ஆய்வுகள் நடத்தப்படலாம். ஆனால், அது இறுதியான விளைவுகளை ஏற்படுத்திவிடாது என்பதை உலக சுகாதார நிறுவனம் உணர்ந்திருக்கிறது. அதனால்தான், உலகளாவிய ஒற்றுமையைப் பிரதிபலிக்கும் வகையிலான ஒரு தளத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

மேலும், “பெருந்தொற்றுக் காலத்தில் பல்வேறு நாடுகள் ஒருங்கிணைந்து கூட்டுழைப்பில் ஆய்வுகள் நடத்தப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது. இந்திய மருத்துவக் கவுன்சில் ஒருங்கிணைப்பில், உலக அளவிலான ஒருங்கிணைந்த ஆய்வுகளில் இந்தியா பெருமளவு பங்களித்திருக்கிறது. இந்தியா போன்ற நாடுகளில், உள்நாட்டிலேயே மருத்துவ ஆய்வுகளை நடத்த முடியும். காரணம், நம் நாட்டின் மக்கள்தொகை மிகப் பெரியது. சாத்தியம் உள்ள எல்லா நோய்கள் குறித்தும் இங்கு ஆய்வு நடத்த முடியும். அத்துடன், நம்மிடம் அதற்கான திறனும் இருக்கிறது. மனிதவளமும் உட்கட்டமைப்பும் இந்தியாவில் உள்ளன” என்று கூறிய சவுமியா சுவாமிநாதன், “ராணுவத்தினரால், மருத்துவ ஆய்வில் பெருமளவு பங்களிக்க முடியும்” என்றும் குறிப்பிட்டார்.

கோவிட் 19 தடுப்பு மற்றும் சிகிச்சையில், அடுத்த கட்டம் ஒருங்கிணைந்த ஆய்வுகள்தான் என கடந்த ஆகஸ்ட் மாதம் உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. அதன்படி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கரோனா நோயாளிகளுக்கு மூன்று புதிய மருந்துகளைச் செலுத்தி பரிசோதிக்கப்படுகிறது. அதேபோல், ஒருங்கிணைந்த தடுப்பூசி ஆய்வுத் தளத்தையும் உலக சுகாதார நிறுவனம் அமைத்திருக்கிறது. அதில் இந்தியாவின் பங்கு முக்கியமானது என உலக சுகாதார நிறுவனம் பாராட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.

x