பிரதமர் நரேந்திர மோடி 18-ம் தேதி வாராணசி பயணம்


புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி வரும் 18-ம் தேதி ஒருநாள் பயணமாக வாராணசிக்கு செல்கிறார்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் வாராணசி தொகுதியில் பிரதமர் மோடி 3-வது முறையாக போட்டியிட்டார். அந்த தொகுதியில் அவர் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.

இந்த சூழலில் வரும் 18-ம் தேதி வாராணசியில் விவசாயிகள் மாநாடு நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். தேர்தல் வெற்றிக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் அங்கு செல்வதால் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்க பாஜக தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.

பிரதமரின் பாதுகாப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும் மாவட்ட காவல் துறையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. அடுத்த சில நாட்களில் சிறப்பு பாதுகாப்புப் படை பிரிவு அதிகாரிகள் வாராணசியில் ஆய்வு செய்ய உள்ளனர்.

பிரதமரின் பயணம் குறித்து பாஜக வட்டாரங்கள் கூறியதாவது: ஜூன் 18-ம் தேதி வாராணசியின் ரோகானியா பகுதியில் விவசாயிகள் மாநாடு நடைபெற உள்ளது. இதில் சுமார் 50,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்க உள்ளனர். இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று விவசாயிகளுடன் கலந்துரையாட உள்ளார்.

அன்றைய தினம் காசி விஸ்வநாதர் கோயிலில் பிரதமர் சிறப்பு வழிபாடு நடத்துவார். கங்கை நதிக்கரையில் நடைபெறும் ஆரத்தி பூஜையில் பங்கேற்பார்.

வாராணசி தொகுதியில் 3-வது முறையாக பிரதமர் மோடி வெற்றி பெற்றிருக்கிறார். அதன்பிறகு அவர் தொகுதிக்கு வருவதால் பிரம்மாண்ட வரவேற்பை அளிக்க திட்டமிட்டு உள்ளோம். இதற்கான ஏற்பாடுகளை பாஜகவின் வாராணசி பகுதி தலைவர் திலீப் படேல் மேற்கொண்டு வருகிறார்.

இவ்வாறு பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

x