நாக்பூர்: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் நாகரிகத்தைப் பேணவில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் விமர்சித்துள்ளார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பிரதமர் மோடி, “காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துப் பெண்களின் தாலியைக் கூட மிச்சம் வைக்காது. சொத்துகளைப் பறித்து முஸ்லிம்களுக்கு வழங்கிவிடும்” என்ற ரீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார்.அவரது கருத்துக்கு தேசிய அளவில்கடும் விமர்சனம் எழுந்தது.
தேர்தலில் பாஜக கூட்டணி 293 இடங்களில் வென்ற நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் அதன் தலைவர் மோகன்பாகவத் பேசுகையில், “உண்மையான சேவகர் அகங்காரமாக நடந்துகொள்ள மாட்டார். யாரையும் புண்படுத்த மாட்டார். பொதுவாழ்வில் நாகரிகத்தைப் பேணுவார். ஆனால், தேர்தல் பிரச்சாரங்களின்போது ஒவ்வொரு கட்சியும் மற்றொரு கட்சியைமோசமாக விமர்சிக்கிறது. இத்தகைய செயல்பாடு சமூகத்தை பிளக்கவே செய்யும். தேர்தலுக்கென்று சில ஒழுங்குமுறைகள் உள்ளன.அவை முறையாக பின்பற்றப்படவில்லை.
ஜனநாயகத்தை உருவாக்குவதற்கான பாதைதான் தேர்தல். ஒவ்வொரு மனிதரும் ஒவ்வொரு கருத்தைக் கொண்டிருப்பர். ஒருசமூகமாக மக்கள் முன்னகர்ந்து செல்வதற்கு ஒருமித்த கருத்து உருவாக்கப்பட வேண்டியதாகிறது. அனைத்து மக்களிடமும் ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவது சாத்தியமற்றது. இந்தச் சூழலில்தான் பெரும்பான்மை அடிப்படையில் அரசு தேர்வு செய்யப்படுகிறது. அதேபோல், ஆட்சியில் இருக்கும் தரப்பு, எதிர்க்கட்சிகளை எதிரியாகபாவிக்கக் கூடாது. அனைத்துத் தரப்புக்கும் செவி கொடுக்க வேண்டும். நரேந்திர மோடி அரசு பல்வேறுதுறைகளில் சாதனை புரிந்திருக்கிறது. ஆனால், இன்னமும் இந்தியாமுன்பு நிறைய சவால்கள் உள்ளன.
கடந்த பத்தாண்டுகளில் மணிப்பூரில் அமைதி நிலவியது. அங்கு துப்பாக்கி கலாச்சாரம் முடிவுக்கு வந்ததாக நினைத்தேன். ஆனால், தற்போது சில பிரச்சினைகளால் அங்கு கலவரம் எழுந்துள்ளது. மணிப்பூர் விவகாரத்துக்கு முன்னுரிமை வழங்கி அங்கு அமைதியை நிலைநாட்ட வேண்டும்” என்றார்