ஒமைக்ரானுக்காக உருமாறும் மருத்துவமனைகள்


ஒமைக்ரான் பரவல் காரணமாக அதிகரிக்கும் தொற்றாளர்களின் மருத்துவ பராமரிப்புக்காக, ஒமைக்ரானுக்கு என பிரத்யேக மருத்துவமனைகளுடன் இந்திய பெருநகரங்கள் தயாராகி வருகின்றன.

ஒமைக்ரான் பரவலின் வேகம் இந்தியாவில் அதிகரித்து வருவதால், அதனை மையமாகக் கொண்டு அடுத்த கரோனா அலை அமையும் என்று மருத்துவ ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். மக்கள் நெருக்கமும், புழக்கமும் அதிகமுள்ள பெருநகரங்களில், அடுத்து வரும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகைகளால் ஒமைக்ரான் பரவல் எதிர்பார்த்ததை விட அதிகமாகும் என அஞ்சுகிறார்கள். முந்தைய கரோனா அலைகள் தந்த பாடங்களின் அடிப்படையில், எதிர்வரும் அலையின் பாதிப்பை எதிர்கொள்ள ஏதுவாக முன் தயாரிப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கரோனா முந்தைய அலைகளில் பெரும் பாதிப்பு கண்ட டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்கள், ஒமைக்ரானுக்கு என பிரத்யேக மருத்துவமனைகளை மாற்றி வருகின்றன. ஒமைக்ரான் நோயாளிகளுக்கு மட்டுமே அனுமதி என்ற அறிவிப்போடு, 4 தனியார் மருத்துவமனைகளின் கட்டமைப்பினை முழுவதுமாக தயார் செய்து டெல்லி அரசு அறிவித்துள்ளது. இவை ஒமைக்ரான் பாதித்தவர்களுக்கான சிறப்பு சிகிச்சைகளை வழங்கும். அதற்கேற்ப படுக்கை வசதிகள், ஆக்சிஜன் இருப்பு, மருந்துகள், தடுப்பு கவசங்கள் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கரோனா பெருந்தொற்றால் அதிகம் அலைக்கழிந்து வரும் இங்கிலாந்துக்கு நிகராக இந்தியாவில் அடுத்த அலை ஏற்படும் என்றும், தினத்துக்கு 14 லட்சம் என்றளவுக்கு இந்தியாவில் பெருந்தொற்றுப் பரவல் உயரும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. தற்போது வரை கிடைக்கும் தகவல்கள், ஒமைக்ரானால் உயிருக்கு ஆபத்தில்லை என்று உணர்த்தினாலும், உருமாறும் வைரஸைப் பொறுத்தவரை உறுதியாக சொல்வதற்கு எதுவுமில்லை. எனவே பெருந்தொற்று பரவலுக்கு எதிரான பாதுகாப்பு அம்சங்களை, தொடர்ந்து தீவிரமாக பின்பற்றுவதே நல்லது.

x