சட்டசபையில் தரம் தாழ்ந்த கருத்து: மன்னிப்பு கேட்டார் முன்னாள் சபாநாயகர்


காங். எம்எல்ஏ ரமேஷ் குமார்

கர்நாடக சட்டசபையில் தரம் தாழ்ந்த கருத்தினை தெரிவித்ததற்காக, முன்னாள் சபாநாயகரும் தற்போதைய எம்எல்ஏ-வுமான ரமேஷ் குமார் மன்னிப்பு கேட்டார்.

கர்நாடக சட்டசபையில் நேற்று நடைபெற்ற மழை சேதம் தொடர்பான விவாதத்தில், அடுத்தடுத்து உறுப்பினர்கள் பேச முன்வந்தனர். அவர்களை எதிர்கொள்ள முடியாது சபாநாயகர் விஷ்வேஸ்வர் ஹெக்டே சலித்துக்கொண்டார். அப்போது முன்னாள் சபாநாயகரும் தற்போதைய காங்கிரஸ் எம் எல் ஏவுமான கே.ஆர்.ரமேஷ் குமார், நகைச்சுவையாக பேசுவதாக நினைத்துக்கொண்டு மகளிர் மாண்பையும், சபையின் கண்ணியத்தையும் குலைக்கும் வகையில் கருத்து உதிர்த்தார். இதற்கு சபாநாயகர் விஷ்வேஸ்வரர் மற்றும் சபையின் ஆண் உறுப்பினர்கள் சிரித்தும் வைத்தனர்.

இந்த விவகாரம் நாடு முழுக்கவுமே கடும் கண்டனத்துக்கு ஆளானது. காங்கிரஸ் எம்எல்ஏவான அஞ்சலி நிம்பால்கர், ரமேஷ் குமார் கருத்தையும் அதனை ரசித்த சபையையும் கடுமையாக சாடினார். நாட்டு பெண்கள் அனைவரிடமும் கர்நாடக சட்டசபை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவர் கொதித்தார்.

இதுபோல கட்சி பேதமின்றி எதிர்ப்புகள் அதிகரித்ததை அடுத்து, ரமேஷ் குமார் தன்னிலை விளக்கத்துடன், தான் பேசிய கருத்துக்காக பகிரங்க மன்னிப்பு தெரிவித்தார்.

இம்மாதிரி கருத்து தெரிவிப்பது ரமேஷ் குமாருக்கு இது முதல் முறையல்ல. 2019ல், சட்டசபையின் தலைவராக இருந்தபோது ’கற்பழிப்புக்கு ஆளான பெண்ணாக உணர்கிறேன்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் உதாரணம் காட்டி மாட்டிக்கொண்டார்.

x