மறக்கப்படுவதற்கான உரிமை: மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம்


தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா குறித்த அறிக்கையை, நாடாளுமன்றக் கூட்டுக்குழு நேற்று (டிச.16) நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்திருக்கும் நிலையில், இந்த மசோதாவில் இடம்பெற்றிருக்கும் ‘மறக்கப்படுவதற்கான உரிமை’ அம்சம் குறித்த செய்திகள் கவனம் ஈர்க்கின்றன.

இதுதொடர்பான ஒரு வழக்கில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருக்கும் மத்திய அரசு, இந்த அம்சத்தின் அவசியம் குறித்து அதில் குறிப்பிட்டிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்னர், மோசடி மற்றும் சதி வழக்கில் இரண்டு தொழிலதிபர்கள் கைதுசெய்யப்பட்டனர். சரக்கு விமானங்களில் பொருட்களை ஏற்றிச்செல்வது தொடர்பான அனுமதியைப் பெறுவதில், போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டது. 2016-ல் அந்த வழக்கிலிருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர். எனினும், அந்த வழக்கு தொடர்பான தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் இருப்பது, தங்கள் தொழில் வளர்ச்சியைப் பாதிப்பதாகவும், அந்தச் செய்திகளை இணையத்திலிருந்து அகற்ற உத்தரவிடுமாறும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்த வழக்கில், மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் பிரமாணப் பத்திரத்தில், “குடிமக்களையும், அவர்களது அந்தரங்க உரிமையையும் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தைப் புரிந்துகொண்டதன் அடிப்படையில் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதாவை அரசு கொண்டுவந்திருக்கிறது. இந்த மசோதாவில், ‘மறக்கப்படுவதற்கான உரிமை’ எனும் கருத்தாக்கத்துடன் தொடர்புடைய அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ஒடிசா, கர்நாடக உயர் நீதிமன்றங்கள் வழங்கிய தீர்ப்புகளையும் இதில் சுட்டிக்காட்டியிருக்கும் அரசு, அந்தரங்க உரிமையில், மறக்கப்படுவதற்கான உரிமையும் ஓர் இன்றியமையாத அம்சம்தான் எனக் கூறியிருக்கிறது.

அதேவேளையில், ஒரு நபருக்கு எதிராக நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீக்குவது தொடர்பான முடிவை, தகவல் தொழில்நுட்பச் சட்டம் கையாள்வதில்லை என்றும் கூறியிருக்கிறது மத்திய அரசு.

2019 டிசம்பரில் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கும் அனுப்பப்பட்டது. 30 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவின் தலைவராக இருந்த மீனாட்சி லேகி, மத்திய அமைச்சரானதைத் தொடர்ந்து, பாஜக எம்.பி-யான பி.பி.சவுத்ரி இதன் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் கடந்த 4 மாதங்களாக இக்குழு இயங்கிவந்தது. பல கட்ட ஆலோசனைகளுக்குப் பின்னர் இந்தக் குழு தனது இறுதி அறிக்கையைச் சமீபத்தில் வெளியிட்டது. அந்த அறிக்கைதான் நேற்று நாடாளுன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சமூகவலைதளங்களின் சரிபார்க்கப்படாத கணக்குகளிலிருந்து வரும் பதிவுகளுக்கு, அந்தந்த சமூகவலைதளங்களே பொறுப்பேற்க வேண்டும் என்று நாடாளுமன்றக் கூட்டுக்குழு பரிந்துரைத்திருக்கிறது. ஒரு தனிபர் குறித்த தரவுகள் மூன்றாவது நபரின் வசம் சென்றுவிட்டதாகத் தகவல் தெரியவந்தால், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் இக்குழு பரிந்துரைக்கிறது. சமூக வலைதளங்களைப் பதிப்பாளர்களாகக் கருத வேண்டும் என்றும் அதில் பதிவாகும் தவல்களுக்கு அவை பொறுப்பேற்க வேண்டும் என்றும் இக்குழு தெரிவித்திருக்கிறது. சமூக வலைதளங்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டும் என்றும் பரிந்துரைத்திருக்கிறது.

இந்த மசோதா சட்டவடிவம் பெற்று அமலுக்கு வந்தால், தனியார் நிறுவனங்கள், பயனாளர்களின் தரவுகளைச் சேகரிக்க அவர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும். மேலும், இதுதொடர்பாகத் தாங்கள் வழங்கிய ஒப்புதலைத் திரும்பப் பெறவும், தங்கள் தரவுகளைத் திருத்தவும், அழிக்கவும் பயனாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்பன உள்ளிட்ட பல்வேறு அம்சங்களும் இடம்பெற்றிருக்கின்றன. அதேவேளையில், இதில் சாதகமான அம்சங்கள் இருந்தாலும், கருத்துச் சுதந்திரம் பறிபோகும் வாய்ப்பு இருக்கிறது என்றும், சிபிஐ, அமலாக்கத் துறை ஆகியவற்றுக்கு அதிக அதிகாரம் கையளிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துவருகின்றன.

நடிகரும், 2008-ம் ஆண்டின் பிக் பாஸ் (இந்தி) வெற்றியாளருமான அசுதோஷ் கவுசிக், இதேபோன்ற கோரிக்கையுடன் டெல்லி உயர் நீதிமன்றத்தை, 2021 ஜூலை மாதம் அணுகினார். 2009-ல் குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் அவர் கைதுசெய்யப்பட்டார். அதுதொடர்பான வழக்கு குறித்த தகவல்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட வேண்டும் என அவர் அந்த மனுவில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

x