வங்கி ஊழியர் போராட்டம் - நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்


ரவிக்குமார் எம்.பி

வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் இன்று தொடங்கியுள்ளதை அடுத்து, நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதிப்பதற்காக ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார், விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார்.

நாடெங்கும் பொதுத் துறை வங்கிகளைச் சேர்ந்த 9 லட்சம் ஊழியர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருப்பதால், பொருளாதார நடவடிக்கைகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, அவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழியைக் கண்டுபிடிப்பதற்கு, மக்களவையின் பிற அலுவல்களை ஒத்திவைத்து விவாதிக்க வேண்டும் எனக் கேட்டு ரவிக்குமார் நோட்டீஸ் அளித்துள்ளார்.

தீர்மான நோட்டீஸின் விவரம் வருமாறு:

“பொதுத் துறை வங்கிகளில் 41,177 பணியிடங்கள் காலியாக உள்ள போதிலும், பொதுத் துறை வங்கி(PSB)களின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு லாபம் கடந்த பத்தாண்டுகளில் 3 மடங்குக்கு மேல் அதிகரித்து ரூ.195,859 கோடியாக உள்ளது. ஒரு சராசரி பொதுத் துறை வங்கி ஊழியர் ஒரு நாளைக்கு 1,800 வாடிக்கையாளர்களைக் கையாளுகிறார்,

அதேசமயம், தனியார் துறை வங்கிகளில் அந்த எண்ணிக்கை 400 முதல் 700 வரை மட்டுமே உள்ளது. வங்கி தொழிற்சங்கங்களின் ஐக்கிய மன்றம் (UFBU) வழங்கிய புள்ளிவிவரங்கள், 13 கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன் நிலுவைத் தொகை ரூ.4,86,800 கோடி என்றும், அந்தக் கடன்கள் ரூ. 1,61,820 கோடிக்குத் தீர்க்கப்பட்டு ரூ.2,84,980 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் காட்டுகின்றன. பொதுத் துறை வங்கிகளின் நிகர லாபத்தில் ஏற்பட்ட இழப்பு, கார்ப்பரேட் நிறுவனங்களின் வாராக் கடன்களைத் தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசின் கொள்கையின் விளைவாகும் என்பதே உண்மை.

தொழிற்சங்கங்கள் தயாராக இருந்தும் இந்தப் பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படாததற்கு, அரசாங்கமே பொறுப்பு. 9 லட்சம் பொதுத் துறை வங்கி ஊழியர்களின் 2 நாள் வேலைநிறுத்தம் நாட்டின் பொருளாதாரச் செயல்பாடுகளை முடக்கும். வங்கி ஊழியர்களின் பிரச்சினைக்குத் தீர்வுகாண அவையில் உடனடி விவாதம் தேவை” என்று ரவிக்குமார் அளித்துள்ள ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது.

x