தள்ளிப்போகும் கிரிப்டோ கரன்சி மசோதா?


நாடாளுமன்றத்தின் நடப்பு குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுவதாக இருந்த, கிரிப்டோ கரன்சியை ஒழுங்குபடுத்தும் மசோதா தள்ளிப்போவதாக தெரிகிறது.

உலகம் முழுக்க கரோனா தொற்றுக்கு இணையாக கிரிப்டோ கரன்சி மீதான மோகமும் பரவி வருகிறது. இணைய செலவாணியான கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தி, தீவிரவாதம், பாலியல், போதை மாபியாக்கள் வளர்ந்து வருவதாக குற்றம் சாட்டப்பட்டது. இதன் மறுபக்கமாக கிரிப்டோ கரன்சிக்கு அடித்தளமான பிளாக் செயின் தொழில் நுட்பங்களின் ஆதாயங்கள் நிராகரிக்க முடியாதவையாக இருந்தன.

பணப் பரிவர்த்தனைக்கு அப்பால் கிரிப்டோ கரன்சி முதலீட்டு உபாயமாக கவனம் பெற்ற பிறகு அதற்கென சந்தைகளும், முதலீட்டாளர்களும் உருவாகினார்கள். கட்டுப்படுத்தவோ, கண்காணிக்கவோ எந்த அமைப்பும் இல்லாததில் கருப்புப் பண அதிகளவில் கிரிப்டோ உலகத்தில் முடங்கி வருகிறது.

இந்தியாவில் கிரிப்டோ கரன்சி தொடர்பான விவாதங்கள் 5 வருடங்களுக்கும் மேலாக வேகமெடுத்திருந்தபோதும், இறுதியும் உறுதியுமான முடிவுகள் எட்டப்படவில்லை. கிரிப்டோ கரன்சிக்கு எதிராக ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்து 3 வருடங்களாகின்றன. தீர்க்கமான வழிகாட்டுதல்கள் மற்றும் சட்ட நடைமுறைகளை வகுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு ஒன்றரை ஆண்டுகளாகின்றன. ஆனபோதும் கிரிப்டோ கரன்சியை முறைப்படுத்துவதில் இழுபறியே நீடித்தது.

ஒருவழியாக, நடப்பு நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் ‘கிரிப்டோ கரன்சி மற்றும் அதிகாரபூர்வ டிஜிட்டல் நாணய ஒழுங்குமுறை மசோதா 2021’ கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ரிசர்வ் வங்கியின் அதிகாரபூர்வ டிஜிட்டல் கரன்சியை உருவாக்குவது, புழக்கத்தில் உள்ள தனியார் கிரிப்டோ கரன்சிகளுக்கு முடிவு கட்டுவது உட்பட பல அம்சங்கள் இதில் அடங்கி இருந்தன. பங்கு வர்த்தகத்தை கண்காணிக்கும் செபி அமைப்பின் பொறுப்பில் கிரிப்டோ கரன்சியும் ஒப்படைக்கப்படும் என்றும், கிரிப்டோ கரன்சியை பணப்பரிவர்த்தனைக்காக அல்லாது சொத்தாக பாவிப்பதற்கான வழிகாட்டுதல்கள் வெளியாகும் என்றெல்லாம் தகவல்கள் கசிய விடப்பட்டிருந்தன.

தற்போது எதிர்பாரா வகையில் கிரிப்டோ கரன்சிக்கான ஒழுங்குமுறை மசோதா மேலும் தள்ளிப்போவதாக தெரிகிறது. கிரிப்டோவை ஒழுங்குபடுத்துவதில் மத்திய அரசுக்கு நீடிக்கும் குழப்பத்தையே இது பிரதிபலிக்கிறது. பணமதிப்பிழப்பு நடவடிக்கை போன்று அவசரப்பட்டு முடிவுகள் எடுக்க மத்திய அரசு விரும்பவில்லை. சர்வதேசளவில் கிரிப்டோவுக்கு சாதகமான சூழல் நிலவும்போது இந்தியாவில் அவற்றை தடை செய்வது ஆரோக்கியமாகவும் அமையாது. அதே வேளையில், கிரிப்டோ கரன்சியில் ஏற்கனவே முதலீடு செய்தவர்களுக்கு வெளியேறவும், அவர்களின் முதலீடு சரியாது தடுக்கவும் வாய்ப்பளிப்பது, தொலை நோக்கு அடிப்படையிலான கிரிப்டோ கரன்சியின் சாதகங்களை ஆராய்வது ஆகியவற்றுக்காக மேலும் நேரம் தேவைப்படுகிறது.

கிரிப்டோ கரன்சி ஒழுங்கு மசோதா தாமதமாக வெளியானாலும் திடமும் தெளிவுமான சட்டமசோதாவாக கொண்டுவரப்படுவதே கிரிப்டோ கரன்சி முதலீட்டாளர்கள் மட்டுமன்றி, தொலைநோக்கிலான தேச நலனுக்கும் நல்லது.

x