இந்தியாவுக்கு இன்னும் 43 லட்சம் செவிலியர்கள் தேவை!


இன்றைய தேதிக்கு இந்தியா முழுவதும் பயிற்சி முடித்து பதிவு செய்துகொண்டுள்ள செவிலியர், மருத்துவத் தாதியர்கள் எண்ணிக்கை 30 லட்சத்துக்கும் அதிகம். ஆனால், இந்த எண்ணிக்கை போதாது என்பதைக் கரோனா காலம் உணர்த்திவிட்டது. கோவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தின்போதுதான் நமது மருத்துவத் துறையின் அடித்தளக் கட்டமைப்புகளை மேலும் பல மடங்கு விரிவுபடுத்த வேண்டியதன் அவசியம் பெரிதும் உணரப்பட்டது.

சமீபத்தில், ‘திங்க் சேஞ்ச் ஃபோரம்’ எனும் அமைப்பு ‘அடுத்த (கரோனா) அலைக்கு இந்தியாவின் செவிலியர் துறை கட்டமைப்பு தயாரா?’ எனும் தலைப்பில் ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதில் பங்கு பெற்ற சுகாதாரத் துறை நிபுணர்கள்தான், இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்குள்ளாக, மேலும் 43 லட்சம் மருத்துவ செவிலியர்கள் இந்தியாவுக்குத் தேவை என்று வலியுறுத்தியுள்ளனர்.

130 கோடிக்கும் மேல் மக்கள் தொகையுள்ள நம் நாட்டுக்கு 30 லட்சம் செவிலியர்கள், மருத்துவத் தாதியர்கள் எண்ணிக்கை போதவே போதாது. உலக சுகாதார அமைப்பின் நியதிப்படி பார்த்தால், இது மிக மிக பற்றாக்குறையாக இருப்பது புரியும். 1,000 பேருக்கு 3 செவிலியர்கள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. 2024-க்குள் இந்த வரையறைப்படி மேலும் 43 லட்சம் பேரைப் பணியில் அமர்த்த வேண்டும். செவிலியர்கள், மருத்துவத் தாதியர்களுக்கு உரிய கல்வி, பயிற்சி அளிக்காமல் நேரடியாகப் பணியில் ஈடுபடுத்திவிட முடியாது. எனவே, அதற்கேற்ப பயிற்சிக் கல்லூரிகள் தொடங்கப்பட வேண்டும். அங்கே பேராசிரியர்களும் தொழில்நுட்ப நிபுணர்களும் நியமிக்கப்பட வேண்டும்.

அரசு மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த பெரிய அரசு மருத்துவமனைகளின் எண்ணிக்கையை, இப்போதுதான் மாவட்டத்துக்கு ஒன்று என்று உயர்த்த எல்லா மாநிலங்களும் சிந்தித்து வருகின்றன. மாவட்டம் மட்டுமல்லாது வட்ட அளவிலும் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைந்த மருத்துவக் கல்லூரிகள் திறக்கப்பட்டால்தான், இந்தியாவில் மருத்துவ சேவை வலுப்படும். செவிலியர், மருத்துவத் தாதியர்களுக்கான பயிற்சிக் கல்லூரிகளை மத்திய, மாநில அரசுகளுடன் இணைந்து தனியாரும் தொடங்க வேண்டும்.

ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியுடனும் ஒன்றுக்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரிகளைக்கூட இதற்காக அனுமதிப்பது குறித்து அரசுகள் சிந்திக்க வேண்டும். மருத்துவ செவிலியர்களுக்கு, சொந்த மாநிலத்தில் மட்டுமல்லாமல் பிற மாநிலங்களிலும் பிற நாடுகளிலும்கூட தேவைகள் அதிகம். கேரளத்தைச் சேர்ந்தவர்கள் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வளைகுடா நாடுகளிலும்கூட வேலை பெறுகின்றனர். எனவே, அரசுகள் இதில் கவனம் செலுத்தினால் வேலைவாய்ப்புடன் கூடிய கல்வியை உறுதிசெய்த நன்மையும் ஏற்படும். மனிதவள ஆற்றலைப் பெருக்குவதில் மருத்துவம் சார்ந்த அனைத்துப் படிப்புகளுக்குமே ஊக்குவிப்புகளை அளிக்கலாம்.

இதற்கேற்ப செவிலியர் பயிற்சி சட்டங்களையும் நடைமுறைகளையும் திருத்த வேண்டும். சுயநிதிப் பொறியியல் கல்லூரிகளைத் திறந்தது போல, சுயநிதி செவிலியர் பயிற்சிக் கல்லூரிகளையும் திறப்பது இந்தக் குறிக்கோளை அடைய உதவும். அதே வேளையில் கட்டணங்கள் உயர்ந்துவிடாமலும், தரம் குறைந்துவிடாமலும் பார்த்துக்கொள்வதும் அவசியம். மருத்துவக் கருவிகளைக் கையாள்வதற்கான பயிற்சி, ஊட்டச்சத்து நிபுணர்களுக்கான பயிற்சி, ரத்தப் பரிசோதனை உள்ளிட்ட மருத்துவப் பரிசோதனைகளைச் செய்வதற்கேற்ற பட்டப் படிப்புகளுக்கும் தமிழக அரசு புதிய அரசு கல்லூரிகளில் முன்னுரிமை வழங்கி, தமிழ்நாட்டை மருத்துவத் துறையில் முதலிடத்துக்குக் கொண்டுவரலாம்.

x