உணவுப் பொருட்களின் மூலப்பொருட்கள் குறித்த முழு விவரங்களும் அவசியம்!


‘என்ன சாப்பிடுகிறோம் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஒவ்வொருவருக்கும் உரிமை இருக்கிறது’ என்று கூறியிருக்கும் டெல்லி உயர் நீதிமன்றம், தயாராகும் உணவு வகைகளில் கலக்கப்பட்டிருக்கும் மூலப்பொருட்கள் குறித்த முழு விவரங்களும் அவற்றின் உறைகளில் குறிப்பிடப்பட்டிருக்கின்றனவா என்பதை உறுதிசெய்யுமாறு, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்துக்கும் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ), மத்திய அரசுக்கும் உத்தரவிட்டிருக்கிறது.

“உணவு மூலப்பொருட்கள் தாவரங்களிலிருந்து பெறப்பட்டவையா அல்லது மாமிசங்களிலிருந்து பெறப்பட்டவையா அல்லது தொழிற்சாலைகளில் உருவானவையா எனும் விவரங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்” என நீதிபதிகள் விபின் சங்கி மற்றும் ஜஸ்மீத் சிங் அடங்கிய அமர்வு அந்த உத்தரவில் தெரிவித்திருக்கிறது. குறிப்பாக, உணவு மூலப்பொருட்கள் குறைவான சதவீதத்தில் கலக்கப்பட்டிருந்தாலும் அவற்றைப் பற்றிய விவரங்களும் குறிப்பிடப்பட வேண்டியது அவசியம் என்றும் அந்த அமர்வு வலியுறுத்தியிருக்கிறது.

உணவுப் பொருட்கள் மட்டுமல்லாமல், வீட்டு உபயோகப் பொருட்கள் உட்பட மக்கள் பயன்படுத்தும் எல்லா பொருட்களையும், மூலப்பொருட்களின் அடிப்படையில், ‘சைவம்’ அல்லது ‘அசைவம்’ என வகைப்படுத்த உத்தரவிட வேண்டும் எனக் கோரி தொடரப்பட்ட மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம், நேற்று (டிச.14) இந்த உத்தரவைப் பிறப்பித்திருக்கிறது.

அசைவ உணவின் மூலப்பொருட்களைச் சேர்த்து உணவு வகைகளைத் தயாரித்து, அவற்றை சைவ உணவாகச் சந்தைப்படுத்துவது சைவ உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடிப்பவர்களின் மதநம்பிக்கையையும், கலாச்சார நம்பிக்கையையும் புண்படுத்துவதாகவும் நீதிமன்றம் கூறியிருக்கிறது.

உணவுத் தயாரிப்பு நிறுவனங்கள் இவற்றை முறையாகப் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டிருக்கும் டெல்லி உயர் நீதிமன்றம், அதிகாரிகள் இவற்றை முறையாகச் சோதனை செய்யத் தவறினால், உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டத்தைப் பின்பற்றிச் செயல்படவில்லை என்றே கருத வேண்டியிருக்கும் என்றும் கண்டிப்புடன் தெரிவித்திருக்கிறது.

x